போராட வெளியே வாருங்கள்! – தொண்டாவுக்கு திகா அழைப்பு

“கூட்டு ஒப்பந்தப் பேச்சுகளிலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேறினால், அரசிலிருந்து வெளியேறி தொழிலாளர்களுக்காகப் போராடுவதற்கு நானும் தயாராகவே இருக்கின்றேன்.”

– இவ்வாறு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் இன்று அறிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றுவரும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு அறிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குத்தான் குறைந்தளவு சம்பளம் வழங்கப்படுகின்றது. இன்று வெள்ளவத்தையிலிருந்து புறக்கோட்டைக்கு ஓட்டோவில் வருவதாக இருந்தால்கூட 500 ரூபாவுக்கு அதிக தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும்.

எனவே, அடிப்படை சம்பளமாக 500 ரூபாவை பெறும் எம் தொழிலாளர்கள் எவ்வாறு வாழ்வது? காலத்துக்குக் காலம் மட்டும் கூட்டு ஒப்பந்தம் குறித்துப் பேசாமல், அப்பிரச்சினைக்குத் நிரந்தரமானதொரு தீர்வு காணப்படவேண்டும்.

ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தமது உரையின்போது தெரிவித்த சில கருத்துகளை நாம் ஏற்கின்றோம். ஆனால், சில விடயங்களை ஏற்கமுடியாது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது தனிவீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், சில உரிமைகளையும் பெற்றுக்கொடுத்து வருகின்றோம். இவையெல்லாம் இந்த அரசின் கீழ்தான் நடக்கின்றன.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கமொன்று தொழிலார்களிடம் ஒரு முகத்தையும், முதலாளிமார் சம்மேளனத்திடம் மற்றுமொரு முகத்தையும் காட்டுகின்றது.

எனது தாயும் மலையில் கொழுந்து பறித்தவள். தொழிலாளர்களின் வலி, வேதனை என்னவென்பது எனக்குத் தெரியும். எனவே, அவர்களை ஒருபோதும் ஏமாற்றவோ, காட்டிக்கொடுக்கவோ மாட்டேன்.

பெருந்தோட்டங்கள் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். உரம் உள்ளிட்ட நிவாரணங்களை அரசு வழங்கவேண்டும். தற்போதைய நிலை தொடருமானால் இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தோட்டங்களில் வேலைசெய்ய ஒருவர்கூட இருக்கமாட்டார்.

கூட்டு ஒப்பந்தப் பேச்சில் தொண்டமானே தன்னிச்சையாக முடிவெடுக்கின்றார். என்ன நடக்கின்றது என்பது ஏனைய தொழிற்சங்கங்களுக்குத் தெரிவதில்லை.

அதேவேளை, கூட்டு ஒப்பந்தப் பேச்சிலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேறினால், நானும் அரசிலிருந்து வெளியேறி தொழிலாளர்களுக்காகப் போராடத் தயாராகவே இருக்கின்றேன். எமக்குப் பதவிகள் முக்கியமில்லை” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *