பட்டலந்த அறிக்கை வந்தால் ரணில் தப்பியோட வேண்டும்! – வாசுதேவவின் கருத்தால் நாடாளுமன்றில் குழப்பம்

“பட்டலந்த படுகொலைகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தியிருந்தார் ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்பட்டிருக்கும். நாட்டை விட்டுத் தப்பியோடுவதே அவருக்கு இருக்கும் ஒரு வழிமுறை இதுதான்” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்த கருத்தால் நாடாளுமன்றத்தில் நேற்று கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில் நேற்று விசாரணைக் குழுக்கள் திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“விசாரணை ஆணைக்குழுக்கள் தொடர்பில் விவாதிக்கப்படுன்றது. அதில் சாதாரண சாதாரண விசாரணை ஆணைக்குழு மற்றும் விசேட விசாரணை ஆணைக்குழு ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றன.

விசாரணை ஆணைக்குழுக்களைத் துரிதப்படுத்துவதன் மூலமாக விசாரணைகளைத் துரிதப்படுத்த முடியும் என்பதே தற்போது அரசு முன்வைக்கும் தர்க்கமாகும்.

நான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தேன். இரு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவும் வழக்குத் தொடர்ந்தேன். அது தொடர்பாக வாக்குமூலம் பெற்றனர்.

ஆனால், இதுவரை எந்த முன்நகர்வும் இல்லை. நான் பொய் கூறியிருந்தால் எனக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை. அடுத்தபடியாக நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஒன்றே உள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பட்டலந்த விசாரணை அறிக்கை என்னானது?. விசாரைணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஏன் முன்னெடுக்கப்படவில்லை?” என்று வாசுதேவ நாணயக்கார உரையாற்றினார்.

அப்போது சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல குறுக்கிட்டார்.

“பிரதமர் எந்த ஆணைக்குழுவையும் நிராகரிக்கவில்லை. அவர் சாட்சியமளித்துள்ளார். உங்களின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

பிரதமர் உள்ளிட்டவர்கள் கூட ஆணைக்குழுக்கள் முன்னிலையில் சாட்சியமளித்தனர்.

மத்திய வங்கிப் பிணை முறி தொடர்பான ஆணைக்குழு முன்பாகப் பிரதமர் வாக்குமூலமளித்தார்” என்று அவர் கூறினார்.

அப்போது நாடாளுமுன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறுக்கிட்டார். “ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஏன் நிறைவேற்றவில்லை?” என்று அவர் உரையாற்றத் தொடங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறுக்கிட்டார்.

“பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவுக்கும், பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவுக்கும் வித்தியாசம் தெரியாத நபர்களிடம் பேசி அர்த்தமில்லை” என்று அவர் கூறினார்.

மீண்டும் வாசுதேவ நாணக்கார கருத்துத் தெரிவித்தார். “இவ்வாறு கூறி நீங்கள் நழுவிக் கொண்டிருங்கள். உங்களுக்கு நாட்டை விட்டுத் தப்பியோடும் ஒரே வழி மட்டுமே உள்ளது. இந்த அறிக்கை தகவல் வெளிவரும்போது, அதற்கான சட்டம் செயற்படும்போது பிரதமரின் குடியுரிமை பறிக்கப்படும் நிலைமை உருவாகும். அவர் தப்பியோட வேண்டிவரும். நீதிமன்றம் இதில் சம்பந்தமில்லை, ஆணைக்குழுவே சம்பந்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

அதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியினர் சபையில் கூச்சலிட்டனர். ஒழுங்குப் பிரச்சினை என்று கூறி விவாதிக்க ஆரம்பித்தனர்.

கூச்சல்களுக்கு மத்தியில் வாசுதேவ தொடர்ந்து உரையாற்றினார்.

“நீங்கள் இறுதியாக நீதிமன்றத்தை சாட்டி தப்பித்துக்கொள்ள வேண்டியுள்ளது. உங்களின் ஒரேயொரு முகாம் இப்போது நீதிமன்றம் மட்டுமே. மக்கள் மத்தியில் செல்ல முடியாதுள்ளது” என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *