கொள்ளையர்களால் சிறுமி வன்கொடுமை! – வலி. வடக்கில் கொடூரம்; எவரும் கைதாகவில்லை

வீட்டின் கூரையைப் பிரித்து உள்நுழைந்த கொள்ளையர்கள் பணத்தைக் கொள்ளையிட்டதுடன், வீட்டிலிருந்த பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கும் உட்படுத்தித் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை வலிகாமம் வடக்குப் பகுதியில் நடந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் நடைபெறுகின்றன என்று பொலிஸ் தரப்புத் தெரிவித்தது.

வலிகாமமம் வடக்குப் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரு கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இரு கொள்ளைச் சம்பவங்களிலும் மூவரே கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இரு இடங்களிலும் வீட்டின் கூரையைப் பிரித்து உள்நுழைந்தே கொள்ளை நடந்துள்ளது.

ஒரு வீட்டில் கூரையைப் பிரித்துக் கொள்ளையர்கள் உள்நுழைந்துள்ளனர். வீட்டில் சிறுமி, சிறுமியின் பெரியதாய், உறவினர் என 3 பெண்கள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்களை அச்சுறுத்தி கட்டிவைத்த கொள்ளையர்கள் வீட்டைச் சல்லடையிட்டுத் தேடுதல் நடத்தியுள்ளனர். வீட்டிலிருந்த 27 ஆயிரம் ரூபாவைக் கொள்ளையிட்டனர்.

வீட்டிலிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். அதன்பின்னர் தப்பிச் சென்றுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் நடைபெற்று 3 நாட்கள் ஆகியுள்ளபோதும் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டும் இவ்வாறான சம்பவம் ஒன்று நடந்திருந்தது. வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்ட அராலிப் பகுதியில் வீடொன்றுக்குள் கூரையைப் பிரித்து நுழைந்த இரு கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டனர். வீட்டிலிருந்த கணவன், மனைவியைக் கட்டி வைத்து கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள், பின்னர் மனைவியைக் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தித் தப்பிச் சென்றிருந்தனர். கடுமையாகப் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பிலும் இதுவரை எவரும் கைதாகவில்லை.

தொடர்ந்து நடைபெறும் இவ்வாறான சம்பவங்களால் மக்கள் அச்சமும், கடும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாதுள்ளமையால் பெரும் விசனமும் அடைந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை நடந்துள்ள மற்றொரு கொள்ளைச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் கடுமையாகக் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வீட்டின் கூரையைப் பிரித்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த வயோதிபத் தம்பதிகளைத் தாக்கிப் பணத்தையும் நகைகளையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

7ஆயிரம் ரூபா பணம், 7 பவுண் நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலுக்கான வயோதிபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை.

அதேவேளை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து வலிகாமம் வடக்குப் பகுதியில் 3 பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *