சமஷ்டி பண்புகள் இருந்தாலே புதிய அரசமைப்புக்கு ஆதரவு! – கூட்டமைப்பு திட்டவட்டம்

“புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையிலும், நிபுணர் குழுவின் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளவாறு ஏக்கிய ராஜ்ஜிய/ ஒருமித்தநாடு என்றவாறு இறுதி வரைவு இருக்கவேண்டும். சமஷ்டி பண்புகளுடன் மாகாணங்களுக்கு நேர்மையான அதிகாரப் பகிர்வு இறுதி வரைவில் காணப்படவேண்டும். இவ்வாறு இருந்தால் மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்களும் அதனை ஆதரிப்பார்கள்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு ஒற்றையாட்சிக்குள்ளேயே அமையும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தெரிவித்ததாவது:-

“புதிய அரசமைப்பின் ஊடாக முன்வைக்கப்படும் தீர்வானது நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் ஒருமித்த நாட்டுக்குள் பிரிக்கப்பட முடியாததாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் அமையவேண்டும்.

அதேவேளை, மாகாணங்களுக்கு நேர்மையான ஓர் அதிகாரப்பகிர்வையும் கொண்டிருக்க வேண்டும்.

இதுவே தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் நிலைப்பாடு. எமது இந்தப் பரிந்துரைகள் இருந்தால் மட்டுமே புதிய அரசமைப்பை நாமும் எமது மக்களும் ஆதரிப்போம்.

புதிய அரசமைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் மற்றும் தமிழ் மக்கள் ஆகியோரின் நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் நான் பல தடவைகள் தெரிவித்து விட்டேன். அதேவேளை, என்னைச் சந்தித்த சர்வதேச சமூகப் பிரதிநிதிகளிடமும் நான் எடுத்துரைத்துள்ளேன்.

நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண கடந்த முப்பது வருடங்களாகப் பல்வேறு கருமங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. தற்போது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனை நாட்டின் நன்மை கருதி அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய அரசமைப்பு நிறைவேற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

நாட்டைப் பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல. பிளவுபடாத ஒருமித்த நாட்டுள்ளேயே நாம் தீர்வைக் கேட்கின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *