போதைப்பொருள் பரிமாற்ற மத்திய நிலையமாக இலங்கை? இன்றும் ரூ.1,100 மில்லியன் பெறுமதியான ஹெராயின் பறிமுதல்! ஐவர் கைது!!

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் 95.88 கிலோகிராம் எடையுடைய, 1100 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட, ஹெராயின் போதைப்பொருள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கொழும்பு – கொள்ளுப்பிட்டியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிலிருந்து, 1.62 கிலோகிராம் எடையுடைய ஹெராயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைத்தபோது, இந்த மூன்று சந்தேக நபர்களும் முதலில் கைது செய்யப்பட்டதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள வீட்டுத் தொகுதியொன்றின் முதல்மாடி சுற்றி வளைக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அங்கிருந்த ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 94.26 கிலோ எடையுடைய ஹெராயின் போதைப்பொருளுடன், மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கைப்பற்றப்பட்ட ஹெராயின் 92 பொதிகளாக நான்கு பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என ருவன் குணசேகர குறிப்பிடுகிறார்.

கைது செய்யப்பட்டவர்களில் 29 மற்றும் 43 வயதுடைய இரண்டு அமெரிக்க பிரஜைகளும், 45 வயதான ஒரு ஆப்கானிஸ்தான் பிரஜையும், 41 மற்றும் 39 வயதுள்ள இரண்டு இலங்கையர்களும் இருப்பதாக ருவன் குணசேகர கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 9 கைபேசிகளும், 3 மடிக்கணினிகளும், ஒரு ஐ-பேடும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால், தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 1994ஆம் ஆண்டுக்கு பின்னரே ஹெராயினுடன், அமெரிக்கப் பிரஜைகள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,

2008 ஆம் ஆண்டுக்கு பின்னரே ஹெராயின் போதைப்பொருளுடன் ஆப்கானிஸ்தான் பிரஜையொருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கையில் 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சுற்றி வளைப்புக்களில் ஹெராயின் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 42 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களில் முதல் தடவையாக பெருமளவான ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்துவரும் துப்பாக்கி பிரயோக சம்பவங்களுக்கும், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாக போலீசார் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த ஆண்டில் இதுவரை ஐந்து துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவை அனைத்தும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறினர்.

இதன்படி, கடந்த 22 நாள்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்தனர்.

இந்த துப்பாக்கி பிரயோகங்களில் அதிகளவானவை, மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், மாத்தறை மாவட்டத்திலும் ஒரு துப்பாக்கி பிரயோகம் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *