ஐ.தே.க. அரசு பழிவாங்கலில் ஈடுபடவில்லை!

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், எக்காரணம் கொண்டும் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடாது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர், தலதா அதுகோரள தெரிவித்தார்.

நாடாளுமன்றில், இன்று  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அரசாங்கம் என்ற ரீதியில் நாம் எந்தவொரு செயற்பாட்டை மேற்கொள்ளவும் பின்வாங்கியதில்லை. ஆனால், எதிர்த்தரப்பு உறுப்பினர்களோ அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள்.

இலஞ்ச – ஊழல் ஆணைக்குழு சுயாதீனமாகத் தான் செயற்படுகிறது என்பதை நான் இங்குக் கூறிக்கொள்ள வேண்டும். அதேநேரம், வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கும்போது சில பின்னடைவுகள் ஏற்படுவதையும் நாம் ஒப்புக்கொள்கிறோம்.

எனினும், எந்தவொரு செயற்பாட்டையும் நாம் திட்டமிட்டு மேற்கொள்ளவில்லை. மத்திய வங்கி பிணைமுறி மோசடி அல்லது இலஞ்ச – ஊழல் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில்தான் எதிரணியினர் கதைக்கிறார்கள். நாம் எதற்கும் அஞ்சப்போவதில்லை.

அனைத்துத் தரவுகளும் எம்மிடம் இருக்கின்றன. கடந்த காலத்தைப்போல அவை மாயமாகாது. சுயாதீன ஆணைக்குழுக்கள் ஊடாக அனைத்து நடவடிக்கைகளும் சுயாதீனமாக முன்னெடுக்கப்படும் என்பதில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

எமது அரசாங்கம் எக்காரணம் கொண்டும் பழி வாங்காது. யாருடைய தேவைக்காகவும் செயற்படாது” என தலதா அதுகோரள மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *