மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு எந்தவொரு நகர்வும் இல்லை!

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு பல்வேறு தரப்புக்களும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்ற போதிலும் அரசு அதற்கான எந்தவொரு நகர்வுகளையும் முன்னெடுக்கவில்லை என்று அறியமுடிகின்றது.

புதிய முறையில் – கலப்பு முறையில் தேர்தல் நடத்த நீண்ட காலம் செல்லும் என்பதால், பழைய முறையில் – விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் தேர்தலை நடத்துவதற்குரிய திருத்த யோசனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ள போதிலும் அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரியவருகின்றது.

மாகாண சபைத் தேர்தலை, உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் போன்று கலப்பு முறையில் நடத்துவதற்கு திருத்தச் சட்டத்தை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றியது. புதிய முறைமைக்கு எல்லை மீள் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்த கூட்டு அரசு அதனை தோற்கடித்திருந்தது.

எல்லை மீள் நிர்ணயத்தை மீளவும் முன்னெடுக்க பிரதமர் ரணில் தலைமையில் குழு நியமிக்கப்பட்டிருந்தது. இந்தப் பணிகள் முடிவடைந்து தேர்தலை நடத்த நீண்ட காலம் செல்லும். மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் அதாவது விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் நடத்துவதற்கு சிறியதொரு சட்டத்திருத்தம் மேற்கொண்டால் போதுமானத. மேற்கொள்ளவேண்டிய சட்டத்திருத்த யோசனை கடந்த வருடம் ஓகஸ்ட் மாதமளவில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அந்த யோசனைக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.

தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பழைய முறையில் தேர்தலை நடத்த இணக்கம் வெளியிட்டுள்ளது.

பழைய முறையில் தேர்தலை நடத்த, கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட யோசனையை செயற்படுத்துமாறு ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு பல தரப்புக்களும் அழுத்தம் கொடுத்துள்ளன. இருப்பினும் அந்த யோசனையை அமைச்சரவைக்கு முன்வைக்க ஐக்கிய தேசிய முன்னணி அரசு தயாரில்லை என்று தெரியவருகின்றது.

அமைச்சரவைக்கு அந்த யோசனை முன்வைக்கப்பட்டு அமைச்சரவை அனுமதி வழங்கினால், வர்த்தமானி வெளியிடப்படும். இரண்டு வாரங்களில் நாடாளுமன்றுக்குச் சமர்ப்பிக்கப்படும். நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டால் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடக் கூடியதாக இருக்கும்.

வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னர் யாராவது அதனைச் சவாலுக்கு உட்படுத்தி நீதிமன்றத்தை நாடினால் மேலும் இரண்டு வாரங்கள் வரையில் தாமதமாகக் கூடும் என்று கூறப்படுகின்றது.

இந்தநிலையில், அமைச்சரவைக்கு குறித்த யோசனையை சமர்ப்பிக்க அரசு எந்தவொரு நகர்வுகளையும் இதுவரை எடுக்கவில்லை என்று அறியமுடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *