கூட்டு ஒப்பந்தத்திலிருந்து பச்சோந்திகள் வெளியேறவேண்டும் – திகா

” மக்களுக்காக மரணிக்கவும் தயாராகவே இருக்கின்றேன். பணத்துக்கு ஆசைப்பட்டு ஒருபோதும் எம்மக்களை கா(கூ)ட்டிக்கொடுக்கமாட்டேன். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பச்சோந்திகளின் தொழிற்சங்க பலத்தை குறைக்க வேண்டும்.” என்று அமைச்சர் திகாம்பரம் சூளுரைத்தார்.

டயகம தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 150 தனிவீடுகள் அடங்கிய “ஆபிரஹாம் சிங்ஹோ” புதிய கிராமம் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது .

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

சுமார் 200 வருடங்களாக 8 அடி காம்பராவில் வாழ்ந்து பழக்கப்பட்ட எமது மக்களுக்கு 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் 7 பேர்ச் காணியும் வழங்கி அதற்கான ஒப்பனையும் வழங்கப்பட்டன.

தனிவீடுகள் அமைக்கப்பட்டன. இதை ஒருபோதும் எமது மக்கள் மறந்துவிடகூடாது. இலங்கை அரசாங்கத்துக்கு வெளிநாடுகள் பல கடன்களை வழங்குகின்றன. அவை மீள செலுத்தப்பட வேண்டும். ஆனால், இந்திய அரசால் வழங்கப்படும் கடன்களை திருப்பி செலுத்த வேண்டியதில்லை.

வடக்கு, கிழக்குக்கு இந்திய அரசாங்கம் கூடுதலாக உதவிகளை செய்துவந்த நிலையில் மலையகத்திற்கும் உதவிகளை செய்கின்றது. அந்தவகையில் வீடுகள், பாடசாலைகள் போன்ற பல்வேறு தேவைகளுக்கு இந்திய அரசாங்கம் எமக்கு உதவிகளை வழங்குகின்றது.

எமது அமைச்சின் மூலமாக எதிர்வரும் காலத்தில் 7 தொடக்கம் 8 வரையிலான கிராமங்களை திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற காத்திருக்கின்றது.

என்ன தான் வீடுகள் கட்டி கொடுத்தாலும், கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக வழங்கப்படும் சம்பள பிரச்சினையில் துரோகம் செய்து விடுகின்றனர்.

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் சட்டதரணி தம்பையா நீதிமன்றம் சென்றிருந்த போதிலும் அது தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அரசியல் அமைப்புக்கு எதிராக ஜனாதிபதி செயல்பட்டதையடுத்து மாற்றம் ஒன்றை கொண்டு வருவதற்காக நீதிமன்றம் சென்ற வேளையில் நீதி கிடைத்தது. ஆனால் சம்பளம் தொடர்பான கொடூரமான ஒப்பந்தத்திற்கு நீதி கிடைக்கவில்லை.

கூட்டு ஒப்பந்தத்தை விட்டு வெளியே வாருங்கள். கூட்டாக சேர்ந்து போராடுவோம் என தெரிவித்தால் அதற்கு இசையாத தொழிற்சங்கங்கள் பொறிமுறை தேவை என தெரிவிக்கின்றன.

கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக இவர்களுக்கு இருக்கும் ஆதாயம் காரணமாக இதை விட்டு வெளி வருவதற்கு இந்த பச்சோந்திகள் விருப்பமில்லை. கேட்டால் திகாவுக்கு அரசியல் தெரியாது என சொல்கின்றார்கள்.

இந்த பச்சோந்திகளின் தொழிற்சங்க பலத்தையும் குறைக்க வேண்டும். செத்தாலும் உங்களுக்காகவே சாவேன் இ.காசுக்கு துணைபோக மாட்டேன்.

இருபது ரூபாய்கும் 30 ரூபாய்க்கும் கெஞ்சி கொண்டு இருப்பதை விடுத்து கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியே வர வேண்டும். கூட்டாக சேர்ந்து போராடுவோம். இந்த வருடம் தேர்தல் வருடமாகும். மக்களுக்கு வழங்கிய ஆயிரம் ரூபாய் கோரிக்கையை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இல்லையேல் 2015ம் ஆண்டு தேர்தல் காலத்தில் எவ்வாறு மக்கள் காட்டினார்களோ அதேபோன்று இம்முறையும் காட்டுவார்கள். ” என்றும் அமைச்சர் கூறினார்.

க.கிசாந்தன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *