ஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்!- நிறுவனத்திடமிருந்து ரூ.153 கோடி இழப்பீடு பெற்ற பெண்

தான் பணிபுரிந்த உணவுவிடுதி நிர்வாகம், தன்னுடைய தனிமனித மத உணர்வுகளைப் புண்படுத்தியமைக்காக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து, 21.5 மில்லியன் டாலர்களை இழப்பீடாகப் பெற்றுள்ளார், மேரி ஜீன் பியர் என்ற பெண்.

மியாமியில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் பாத்திரங்களைக் கழுவும் பணியில் ஈடுபட்டுவந்தார்.

2006 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம், அவர் பணியில் அமர்த்தப்பட்டபோதே,  ‘ஞாயிற்றுக் கிழமைகளில் தன்னால் பணிபுரிய இயலாது எனவும்,  தான் ஒரு தேவாலயத்தில் மிஷனரியாக உள்ளதாகவும்’ தெரிவித்துவிட்டே வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

மேலும்,  “நான் கடவுளை நேசிக்கிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் என்னால் வேலை செய்ய இயலாது . ஏனெனில், நான் கடவுளின் வார்த்தைகளை மதிக்கிறேன் ” என்று கூறியிருக்கிறார்.

இதை ஏற்ற ஹோட்டல் நிர்வாகம், பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமைகளில், மேரி ஜீனை பணிபுரிய நிர்பந்திக்காமல், அவரது மத உணர்வுகளை மதித்து நடந்தது.

ஆனால்,   2015-ம் ஆண்டு முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கட்டாயமாகப் பணிபுரிந்தே ஆக வேண்டும் என ஹோட்டலின் சமையல் மேலாளர், பியரை நிர்பந்தித்துள்ளார்.

பிறகு, சக ஊழியர்களின் உதவியை நாடினார் பியர். தனக்குப் பதிலாக, ஞாயிறுக்கிழமைகளில் அவர்களைப் பணிபுரிய கேட்டுக்கொண்டார். ஆனால், அதுவும் பலனலிக்கவில்லை. இதையடுத்து, 2016 -ம் ஆண்டு ‘ தவறான நடத்தை, கவனக்குறைவு ,  ஏற்க இயலாத விடுப்பு’ ஆகியவற்றிற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டார் மேரி ஜீன் பியர்.

மத உணர்வுகளின் அடிப்படையில் தன்மீது உணவு விடுதி நிர்வாகம் பாகுபாடு காட்டியதாக,  சமமான வேலைவாய்ப்பு ஆணையத்திடம் புகார் அளித்ததுடன், வர்ஜீனியாவிலுள்ள டைசன்ஸின் பார்க் ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸுக்கு எதிராக  சிவில் உரிமைச் சட்டத்தை மீறியதாகவும் வழக்கு தாக்கல்செய்தார்.

இதுகுறித்துக் கூறிய பியரின் வழக்கறிஞர்,  ‘தன்னுடைய பணியாளர்களின் மத உணர்வுகளை மதித்து நடத்தல் ஒரு நிர்வாகத்தின் கடமை. மேரி ஜீனின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது எளிமையான ஒன்றுதான். ஆனால், ஹோட்டல் நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்துள்ளது.

இழப்பீட்டின்மூலம் பெறப்போகும் தொகை இங்கு முக்கியமல்ல.  நாங்கள் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு செய்தியைக் கூற விழைகிறோம். அவர்கள், மனசாட்சியற்ற வணிகர்களாக இருக்கிறார்கள்.

பில்லியன்களில் புரளும் அவர்களுக்கு, மில்லியனில் வழங்கப்படும் அபராதம் பெரிதல்ல. ஆனால், அவர்களின் இந்த மனநிலையை மாற்றப்போகும் அபராதம்  எதுவாக இருக்கும் என்பதை நீதியரசர் முடிவுசெய்ய வேண்டும்’ எனக் கூறினார்.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த கூட்டாட்சி நீதிபதி,  ‘மேரி ஜீன் பியருக்கு ஹோட்டல் நிர்வாகம் 21.5 மில்லியன் டாலர்களை இழப்பீடாகத் தர வேண்டும் என தீர்ப்பளித்தார்.

இதில், 36,000 டாலர், இழந்த ஊதியங்கள் மற்றும் நலன்களுக்காகவும் ,  500,000 டாலர் மன வேதனைக்காகவும், மீதமுள்ள 21 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பு 153 கோடி ரூபாய்) தண்டனைக்குரிய இழப்புகளுக்காகவும் வழங்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.

இது, மத சுதந்திரம் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான முக்கியத் தீர்ப்பாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *