காணாமல்போன ‘பேய் கிராமம்’ – இது கதையல்ல நிஜம்!

உலகில் உள்ள சில விஷயங்கள் இன்னும் கூட புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருப்பதை நாம் பார்க்கலாம்.
அதை சிலர் விஞ்ஞான ரீதியில் அணுகுவார்கள்; இன்னும் சிலர் பேய், மாயம், மந்திரம், பயம் என்ற ரீதியில் பார்ப்பார்கள். அப்படிப்பட்ட மர்மங்களில் ஒன்று, யாருமே இல்லாத அழிந்த நிலையில் காணப்படும் கிராமங்கள்.

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ளது குல்தாரா என்ற கிராமம்.
இந்த கிராமத்தை பலரும் ‘பேய் கிராமம்’ என்றுதான் அழைக்கிறார்கள். இங்கு மக்கள் நடமாட்டம் கிடையாது.
பழங்கால வீடுகளும் அழிவுற்ற நிலையில் சிதைந்து காணப்படுகின்றன. 12ஆம் நூற்றாண்டில் இருந்து இயங்கி வந்ததாக வரலாற்றில் பதிவாகியுள்ள இந்த கிராமம், 85 குக்கிராமங்களை உள்ளடக்கியதாக இருந்து வந்துள்ளது.
விவசாயத்தை முக்கியத் தொழிலாக செய்து வந்த இந்த கிராமம், 1825ஆம் ஆண்டு வாக்கில் ஒரே நாளில் காணாமல் போய்விட்டதாக சொல்லி அதிர்ச்சியளிக்கிறார்கள்.
ஜெய்சால்மர் பகுதியை ஆண்ட திவான், குல்தாரா கிராமத்தின் தலைவரது மகளை மணக்க நினைத்ததாகவும், அதற்கு கிராம தலைவர் ஒப்புக் கொள்ளாததால், அவர்களை துன்புறுத்தியதாகவும்,
அதனால் அங்குள்ள மக்கள் ஒட்டு மொத்தமாக கிராமத்தை காலி செய்து விட்டு சென்று விட்டதாகவும் செவி வழிக் கதை ஒன்று கூறப்பட்டாலும், அதில் எந்த உறுதியும் இல்லை.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமத்தின் கதி என்ன என்பது சரியாக எவருக்கும் தெரியவில்லை. அந்த மர்மம் இப்போது வரை நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இதே போன்றதொரு கிராமம் தான், அமீரத்திலும் இருக்கிறது. இந்த கிராமத்திலும் கூட யாருமே வசிக்கவில்லை. அதற்கான காரணம் என்ன?
எதனால் இப்படி கிராமம் சிதைவுற்று இருக்கிறது? என்பதற்கு பல்வேறு கதைகள் சொல்லப்படுகிறதே தவிர, கிராமத்தின் உண்மையான நிலையைக் கூறி, அதன் மர்மத்தை உடைக்க எவரும் இல்லை.
இப்படி பல மர்ம முடிச்சுகளைக் கொண்ட அந்த பகுதி சார்ஜாவில் உள்ளது. அல் மதாம் என்ற அந்த கிராமத்தை, அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் ‘பேய் கிராமம்’ என்று அழைக்கிறார்கள்.
இன்னும் கூட இந்தப் பகுதியில் பேய் நடமாட்டம் இருப்பதாக பலரும் பயப்படுகிறார்கள். பகல் வேளையில் ஓரிருவர் சென்று வந்தாலும், இரவு நேரத்தில் இங்கு எவரும் இருக்க மாட்டார்கள்.
ஆனாலும் சில சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவ்வப்போது குழுக்களாக இந்த இடத்திற்கு செல்வது உண்டு. அவர்களும் கூட அந்த இடத்தில் சில அமானுஷ்ய சக்திகளை உணர்வதாக சொல்லி பலரையும் திகிலடையச் செய்கிறார்கள்.
அல் மதாம் பகுதியின் வரலாற்றைப் புரட்டினால், மர்ம முடிச்சுகள் சிலவற்றிக்கு விளக்கம் கிடைக்கிறது. திகிலடையச் செய்யும் அந்த கிராமத்திற்குள் கொஞ்சம் செல்வோம்.
சார்ஜாவில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, மனிதர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்களை தொல்பொருள் ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் இருந்து அறிய முடிகிறது.
அப்படி பழம்பெருமை வாய்ந்த பகுதியில் ஆச்சரியங்களும், மர்மங்களும் நிறைந்து உள்ளன. அதே வேளையில் அமீரகத்தில் வசிக்கும் பலருக்கு தெரியாத மர்மமான இடங்களில், சார்ஜாவின் பேய் கிராமம் என்று அழைக்கப்படும் இந்த பழமையான கிராமமும் ஒன்று.
துபாயில் இருந்து 60 கிலோமீட்டர் மற்றும் சார்ஜாவில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அல் மதாம் என்ற பாலைவன பகுதி. இங்கு இருந்து தென்மேற்கு பகுதியில் சுமார் 2 கி.மீ தொலைவில் தான் அல் மதாம் கிராமம் இருக்கிறது.
ஒரு காலத்தில் வாழ்வதற்கேற்ற அழகிய பகுதியாக இருந்த இந்த இடம், தற்போது மனித நடமாட்டமே இன்றி காணப்படுகிறது.
அல் மதாம் கிராமம் முழுவதும் பாலைவனப் புழுதிப் புயலில் சிக்கியது போல், மணலில் புதையுண்டு கிடக்கிறது. அங்கிருக்கும் கட்டிடங்கள் அனைத்தும் மேற்கூரை மட்டும் வெளியே தெரிந்தபடி இருக்கின்றன.
பலமுறை பாலைவன மணல் புயலில் சிக்கி சிதைந்த இந்த கிராமம் தொடர்ந்து துன்பங்களை மட்டுமே சந்தித்து வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அமீரக அரசின் மூலமாக வீட்டு வசதி திட்டத்தின் கீழ், இந்த கிராமத்திற்கு அரசால் கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளது.
அதற்கடுத்த 10 ஆண்டுகள் மட்டுமே அந்த கிராம மக்களின் வாழ்க்கை நிம்மதியாக இருந்துள்ளது. அதன் பிறகும் அந்த பகுதியில் தொடர்ந்து மணல் புயல் வீசத் தொடங்கியது.
புயலால் அடித்து வரப்பட்ட மணலானது, வெள்ளம் வருவது போல வந்து, அங்கிருந்து வீடுகளை தாக்கியது. இதில் அந்த கிராமம் முழுவதுமே மணலில் புதையுண்டது.
தொடர்ந்து அந்த கிராமம் அழிவுப் பாதையில் சிக்கி வருவதற்கு, ‘ஜின்’ என்ற தீய சக்தியே காரணம் என்று அங்குள்ள மக்கள் நம்பினர்.
அதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வேறு பகுதிக்கு குடிபெயரத் தொடங்கினர். இதன் காரணமாக இன்று அந்தப் பகுதியில் புதையுண்ட வீடுகளும், கட்டிடங்களும் மட்டுமே காணப்படுகின்றன.
மனிதர்கள் தென்படுவதில்லை. இறைவன் படைப்பில் கண்ணுக்குத் தெரிந்த படைப்பினங்களைப் போலவே, கண்ணுக்குத் தெரியாத சில படைப்புகளும் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ஜின் என்று சொல்லப்படுகிறது.
அதுவும் கூட நல்ல ஜின், கெட்ட ஜின் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. அல் மதாம் பகுதியில் கெடுதல்களைத் தரக்கூடிய ஜின் என்னும் தீய சக்தி இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.
இன்றும் அல் மதாம் கிராமப் பகுதிக்குச் சென்றால், மணலில் மூழ்கிய வீடுகள் மற்றும் கட்டிடங்களை பார்த்து வரலாம்.
அங்கு வாழ்ந்த மக்கள் விட்டு சென்ற பொருட்களும், சேதமடைந்த நிலையில் அங்கு அப்படி அப்படியே இருப்பதையும் காண முடியும். கிராமம் அழிவதற்கு மணல் புயல்தான் காரணம் என்று சொல்லப்பட்டாலும்,
ஒரு சிலர் ஒரு கிராமமே மணலில் புதைந்து போகும் அளவுக்கு மணல் புயல் வீசுகிறது என்றால், அங்கு தீய சக்தி இருப்பதாகத் தானே அர்த்தம் என்று சொல்லி திகிலடையவும் செய்கிறார்கள்.
தற்போது இந்தப் பகுதி சுற்றுலா பயணிகள் சென்று சுற்றிபார்க்கும் இடமாக மாறியுள்ளது. பகலில் இந்த பகுதிக்கு வாகனங்களில் செல்வோர், இரவில் செல்வதில்லை. மனதில் துணிச்சல் உள்ளவர்கள் இரவு நேரத்தில் தங்கி பேய் உள்ளதா? என ஆய்வு செய்யவும் தயங்குவதில்லை.
மணல் புயலா அல்லது தீய சக்தியா என்பது விவாதத்திற்குரியதாக இருந்தாலும், ஒரு பழமையான கிராமம் இன்று இல்லை என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *