துரோக வரலாற்றில் இடம்பிடிக்காதீர்கள்! புதிய அரசமைப்புக்கு ஆதரவு வழங்குக!! – மஹிந்த அணியிடம் வேலுகுமார் கோரிக்கை

புதிய அரசமைப்பு வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியும், பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்

என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியுமான வேலுகுமார் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு உள்நாட்டிலேயே தீர்வு காண்பதற்கு கிடைத்துள்ள இறுதி வாய்ப்பை குறுகிய அரசியல் நோக்கத்துக்காக இவர்கள் குழப்பியடிப்பார்களாயின் அது நாட்டுக்கு இழைக்கும் மாபெரும் துரோகமாகவே அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கண்டி நகரில் இன்று (18.01.2019) நடைபெற்ற அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு புதிய அரசமைப்பு குறித்து கருத்து வெளியிட்ட வேலுகுமார் எம்.பி., அது தொடர்பில் மேலும் கூறியதாவது:-

“புதிய அரசமைப்பு வரைவுக்கான யோசனைகள் உள்ளடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கையானது கடந்த வெள்ளிக்கிழமை அரசமைப்பு நிர்ணய சபையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்டது.

இது புதிய அரசமைப்புக்கான இறுதிப்படுத்தப்பட்ட சட்டமூலம் கிடையாது. அதைத் தயாரிப்பதற்கான ஆரம்பக்கட்ட வரைவு நகல் மாத்திரமே.

எனினும், நிபுணர் குழு அறிக்கையிலுள்ள உள்ளடக்கங்களை ஆறாம் அறிவைக்கொண்டு பகுத்தறிந்து பார்க்காமலேயே அதற்கு பிரிவினைவாத முத்திரையை மஹிந்தவும், அவர்களின் சகாக்களும் குத்தியுள்ளனர்.

அத்துடன், மக்களை நல்வழிப்படுத்தும் வகையில் ஆலோசனைகளை வழங்க வேண்டிய மகாநாயக்க தேரர்கள் கூட புதிய அரசமைப்பை இனவாத நோக்கில் பார்ப்பது கவலையளிக்கின்றது. இதனால், நடுநிலை பார்வையைச் செலுத்தும் மகாநாயக்க தேரர்களின் பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.

உத்தேச அரசமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளிப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஒற்றையாட்சிக்குரிய முக்கிய அம்சங்களே அதில் உள்ளன. அதாவது, பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை மஹிந்த அணி விரும்பவில்லையா?

தமிழ் பேசும் மக்களுக்கு எதுவுமே கிடைக்கக் கூடாது என நினைக்கும் சிங்கள மேலாதிக்க தன்மை ஒழியும் வரை நாட்டில் நிலையான சமாதானம் மலரப்போவதில்லை. அதுமட்டுமல்ல இலங்கையில் உள்ளக பொறிமுறையானது என்றுமே வெற்றியளிக்காது.

ஆகவே, சர்வதேசத்தின் தலையீடு அவசியம் என்பதையே மஹிந்த அணியினதும், கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின் செயற்பாடுகள் உணர்த்தி நிற்கின்றன.

ஐ.நாவில் தமிழில் உரையாற்றியதாலும், பொங்கல் வாழ்த்து செய்தியை தமிழிழ் வெளியிடுவதாலும் தமிழ் மக்களின் மனங்களை வென்றுவிடலாம் என மஹிந்த ராஜபக்வும், அவரது சகாக்களும் பகல் கனவு காணக்கூடாது.

உங்களின் சிற்றின்ப அரசியலைக் கண்டு பேரின்பம் அடையுமளவுக்கு தமிழர்கள் ஒன்றும் ‘கொண்டைகட்டிய சீனர்கள் அல்லர்’ என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன்.

தமிழ் மக்கள் மீது உண்மையில் அக்கறை இருந்தால் அவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் கோரும் அரசியல் தீர்வை வழங்க எதற்காக தடை ஏற்படுத்த வேண்டும்?

போர் முடிவடைந்த பின்னர் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை அன்று மஹிந்த அரசு முன்னெடுக்காததால்தான் சர்வதேசத்தின் பிடிக்குள் இலங்கை சிக்கியது.

தற்போது எமக்குக் கிடைத்துள்ளது இறுதி வாய்ப்பு. அதையும் கோட்டை விட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

எனவே, இனவாதம் பேசி சிங்கள மக்கள் மத்தியில் நாயகனாக வலம் வரும் திட்டம் என்றும் வெற்றியளிக்காது. என்றாவது ஒருநாள் அது காலைவாரிவிடும். அப்போது துரோக வரலாற்றில் இடம்பெறவேண்டிய அவலநிலையே ஏற்படும்.

ஆகவே, தமிழ் மக்களின் மனங்களிலும் மஹிந்த இடம்பெற வேண்டுமானால் புதிய அரசமைப்பு வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு முழுப் பங்களிப்பையும் வழங்கவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *