அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை ஒருபோதும் பெயரளவில் இயங்குவதாக இருக்கக்கூடாது. – நஸீர் எம்.பி.

பெயரளவில் இயங்கி வருகின்ற ஒரு வைத்தியசாலையாக அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை ஒருபோதும் இருக்கக்கூடாது. அவ்வாறு இயங்குகின்ற ஒரு வைத்தியசாலையாக இயங்குவதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் 2018 – 2019 ஆம் ஆண்டின் மீளாய்வுக் கூட்டம் நேற்று (17) அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும் ஆயர்வேத வைத்திய நிபுணருமான கே.எம்.அஸ்லம் தலைமையில் வைத்தியசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் 3 தள ஆயுர்வேத வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன. அதில் திருகோணாமலை மாவட்ட கப்பல்துறை பிரதேசத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும், அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேசத்திலும் மிகச் சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன.

இவ்வாறு இயங்கி வருகின்ற மூன்று வைத்தியசாலைகளில் அட்டாளைச்சேனை வைத்தியசாலையை மாத்திரம் மடுத்தோன்டி புதைத்து விடுகின்ற அளவுக்கு சில அதிதிகாரிகளின் செயற்பாடுகள் இருந்து வருகின்றன. இதனை நான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.

கப்பல்துறை மற்றும் புதுக்குடியிருப்பு போன்ற வைத்தியசாலைகள் எல்லா விடயங்களிலும் அபிவிருத்தியடைந்து முன்னெற்றப்பாதைக்குச் செல்லவேண்டும் ஆனால் அட்டாளைச்சேனை வைத்தியசாலை மாத்திரம் எவ்வித அபிவிருத்திகளுமின்ற மடுவில் விழவேண்டும் என்ற சிந்தனையில்தான் சில அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றனர். இவ்விடயங்கள் யாவும் ஒரு மனவேதனையைத் தருகின்றது.

நாம் செய்கின்ற, செய்து வருகின்ற, செய்யப்போகின்ற சகல சேவைகளும் மக்களுக்காகவே அன்றி நமக்கானவையல்ல என்பதை அந்த அதிகாரிகள் புரிந்துகொள்வார்களானால் இவ்வாறான விடயங்களில் அவர்கள் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள்.

ஆயுர்வேத மருத்துவத்துவ சிகிச்சை முறையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மிக அதிகமான மக்கள் நாட்டம் கொண்டவர்களாக இன்று காணப்படுகின்றனர். அதற்கான சகல வசதி வாய்ப்புக்களையும் வழங்கி வருவதோடு மிகக் கூடுதலான நிதிகளையும் அரசு வழங்கி வழங்குகின்றது.

இந்த ஆயுர்வேத மருத்துவத்துறையை முன்னெற்றுகின்ற பொறுப்பும், இந்த மருத்துவ முறைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்ற பாரிய பொறுப்பும் உயர் அதிகாரிகளுக்கும், வைத்தியர்களுக்கும், வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இருக்கின்றது. இதில் குறோதம் வைத்துக்கொண்டு செயற்படுகின்றவர்களாக யாரும் இருக்கக் கூடாது என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையை ஒரு முன்னெற்றப் பாதைக்கு கொண்டு சென்று ஒரு மாகாண வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றேன். இதன் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின மக்களுக்கும் மிகச் சிறந்த ஆயுர்வேத மருத்துவ சேவைகளை வழங்குகின்ற ஒரு வைத்தியசாலையாகவும், ஏனைய மாகாணங்களிலுள்ள வைத்தியசாலைகளை விட எமது வைத்தியசாலை மிகச் சிறப்பாக இயங்கி சேவை வழங்கும் வைத்தியசாலையாக சிறந்து விளங்கவேண்டும் என்பதே எனது அவாவாகும். இந்த சிந்தனை எனக்கு மட்டுமல்ல எமது மாகாணத்தில் விஷேடமாக இத்துறையிலுள்ள உயர் அதிகாரிகளுக்கும், வைத்தியர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் இருக்கவேண்டும்.

அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே இந்த வைத்தியசாலையை ஒரு மாகாண வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கும் நாட்டிலுள்ள ஏனைய ஆயுர்வேத வைத்தியசாலைகளை விட மிகச் சிறந்த வைத்திய சேவைகளை மக்களுக்கு வழங்குகின்ற சிறந்ததொரு வைத்தியசாலையாக மாற்றியமைக்க முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *