அம்பாறை பள்ளிவாசலுக்கான நஷ்டஈட்டை விரைவில் பெற்றுத் தருவேன் – கிழக்கு ஆளுநர் உறுதி

அம்பாறை பள்ளிவாசலுக்கான நஷ்டஈட்டை விரைவில் பெற்றுத் தர அனைத்து ஏற்பாடுகளையும் அவசரமாக முன்னெடுக்கவுள்ளேன் என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

அம்பாறை பள்ளிவாசலுக்கு இன்றைய தினம் திடீரென வியஜம் செய்த வேளையில் அப் பள்ளிவாசலின் நிர்வாகத்தினர், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,

அம்பாறை பள்ளிவாசல் இனவாதிகளால் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி சம்பந்தமாக தான் இராஜாங்க அமைச்சராக இருந்த காலப் பகுதியிலேயே பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளதுடன், தற்போதும் இது விடயத்தை அமைச்சரவைக்கு கொண்டு செல்வதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்கின்றேன்.

இந்த விடயத்தில் அமைச்சரவையிலுள்ள எமது முஸ்லிம் அமைச்சர்கள் கட்டாயம் அவர்களின் ஒத்துழைப்புக்களையும், முயற்சிகளையும் வழங்க வேண்டும். தற்போது அமைச்சரவையில் நான் இல்லாத சந்தர்ப்பத்தில் அவர்களே இதுவிடயத்தில் ஊக்கமெடுக்க வேண்டும்.

அதற்குண்டான அனைத்து விடயங்களையும் தயார்படுத்தி இப் பள்ளிவாசலின் அபிவிருத்தி, நிதி ஒதுக்கீடுகளுக்கு நான் முயற்சிப்பேன்” – என்றார்.
இச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலும் கலந்து கொண்டிருந்தார்.

குறித்த பள்ளிவாசல் இனவாதிகளினால் சேதமாக்கப்பட்ட பின்னர் 27 மில்லியன் நஷ்டஈடாக கோரப்பட்டு, ஒதுக்கீடு செய்ய தயார் நிலையிலிருந்த போதிலும் அது சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் பரிசீலனைக்குட்படுத்தப்பட்ட அந்த நிதி 10 இலட்சமாக குறைக்கப்பட்டிருந்தது.

மேலும், இப் பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடங்களை அண்மிக்கவுள்ள நிலையில் இது விடயமாக முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பிக்கள் உட்பட பலரும் நேரடி வியஜம் செய்து பார்வையிட்டு அபிவிருத்தி செய்து தருவதாக வாக்குறுதிகள் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *