வடமராட்சிக்குப் பெருமை தேடித் தந்த சுமந்திரன் எம்.பிக்கு அமோக வரவேற்பு!

‘தமிழினத்தின் காவலனே வருக வருக’ எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கு பருத்தித்துறையில் நேற்று மாலை பிரமாண்டமான வரவேற்பளிக்கப்பட்டது.

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பெரும் அரசியல் குழப்பத்துக்கு உயர்நீதிமன்றத்தில் கம்பீரத்துடன் வாதாடி ஜனநாயகத்தை நிலைநிறுத்தி, தமிழ் மக்களுக்கும் தான் பிறந்த வடமராட்சி மண்ணுக்கும் பெருமை தேடிக் கொடுத்தமைக்காகவே இந்த விழா வடமராட்சி பொது அமைப்புக்களாலும் பொதுமக்களாலும் நடத்தப்பட்டது.

இதன்போது மாலைகள் அணிவித்து, பொன்னாடைகள் போர்த்தி மேளதாளங்களுடன் பருத்தித்துறை நகரிலிருந்து சுமந்திரன் எம்.பி. ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் ஆலயம் முன்பாக வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.

யாழ்.பல்கலைக்கழக ஓய்வுநிலை பேராசிரியர் மா.நடராசசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சட்டத்தரணி சந்திரசேகரனின் வரவேற்புரையைத் தொடர்ந்து வாழ்த்துரைகளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை செயலாளர் இ.இரட்ணவடிவேல், ஓய்வுநிலை அதிபர் கலாநிதி எஸ்.சேதுராஜா, ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் எஸ்.நந்தகுமார், பருத்தித்துறை நகர சபைத் தவிசாளர் யோ.இருதயராஜா, கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் த.ஐங்கரன், சிரேஷ்ட சட்டத்தரணி சி.காண்டீபன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா ஆகியோர் வழங்கினர்.

வாழ்த்துரைகளைத் தொடர்ந்து ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஏற்புரை வழங்கினார்.

இறுதியாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா.அரியகுமாரின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *