அரசமைப்பு உருவாக்க முயற்சியிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம்! – பிரதமர் ரணில் உறுதி

“தடைகள் வரும்போது அஞ்சமாட்டோம். அதைத் தகர்த்து அனைவரினதும் மனதையும் வெல்வோம். புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம். நாம் எடுத்த கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம். வதந்திகளை நம்பாதீர்கள்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மகாநாயக்க தேரர்கள் மற்றும் சிங்களப் புத்திஜீவிகள் ஆகியோரின் எதிர்ப்பையடுத்து புதிய அரசமைப்பைக் கொண்டுவரும் முயற்சியில் இருந்து அரசு பின்வாங்குகின்றது என்று வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“புதிய அரசமைப்பின் உள்ளடக்கங்களை நாட்டிலுள்ள சகல தரப்பினருக்கும் நாம் தெளிவுபடுத்துவோம். நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் இந்தப் பணிகளை நாம் நினைத்த மாதிரி முன்னெடுக்க முடியாது. சகல தரப்பினரினதும் மனதையும் வென்று புதிய அரசமைப்பைக் கொண்டு வந்தே தீருவோம்.

மூவின மக்களுக்கும் நாம் அளித்த வாக்குறுதிகளிருந்து பின்வாங்கமாட்டோம். அவர்களை நல்லிணக்கத்துடன் சமாதானமாக வாழ வைப்பதே எமது நோக்கம்.

பிளவுபடாத நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்குவோம். நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சியில் நாம் ஒருபோதும் ஈடுபடமாட்டோம்.

சிறுபிள்ளைத்தனமாக அரசியல் நடத்துவோர் எம் மீது அர்த்தமற்ற – போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

நாட்டு மக்களுக்கு உண்மை நிலை புரியும்போது குழப்பவாதிகளும் திருந்தி நல்ல வழிக்கு வருவார்கள்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *