அத்தனகல கோட்டையிலிருந்து சந்திரிகா ‘அவுட்!’ 15 பேரின் பெயர்ப்பட்டியல் ‘ரெடி!!’ – நாடு திரும்பிய கையோடு கட்சிக்குள் களையெடுப்பார் மைத்திரி

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 தொகுதி அமைப்பாளர்கள் அடுத்தவாரம் பதவி நீக்கம் செய்யப்படவுள்ளனர் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

சந்திரிகா அம்மையாருக்கு சார்பாகச் செயற்படும் குறித்த நபர்களின் பெயர் பட்டியல் கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

எனவே, பிலிப்பைன்ஸ் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய கையோடு, கட்சிக்குள் களையெடுக்கும் பணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மும்முரம் காட்டுவார் எனத் தெரியவருகின்றது.

அத்துடன், சந்திரிகா அம்மையாரின் அரசியல் கோட்டை எனக் கருதப்படுகின்ற அத்தனகல தொகுதிக்கும் புதிய அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். குறித்த பகுதியில் சந்திரிகா அம்மையாரின் அரசியல் செயற்பாடுகளை முடக்கும் வகையிலேயே இவ்வியூகம் வகுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பானது, கட்சியின் தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியில் அண்மையில் இறங்கியது. இதனால், தலைமை அலுவலகம் இழுத்து மூடப்பட்டு, சாவிக்கொத்தானது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்ல வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் வீட்டில் இரகசிய சந்திப்பொன்றையும் குறித்த அமைப்பு நடத்தியிருந்தது. சந்திரிகா அம்மையாரே குறித்த குழுவை வழிநடத்துகின்றார் என்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கட்சியின் கீழ்மட்ட அரசியல் இயந்திரத்தில் அதிரடி மாற்றங்களை செய்யும் முடிவை ஜனாதிபதி எடுக்கவுள்ளார்.

குறித்த நபர்கள் தொகுதி அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டாலும், கட்சி உறுப்புரிமையிலிருந்து அவர்கள் நீக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சந்திரிகா அம்மையாரும் அரசியல் வியூகம் வகுத்து வருகின்றார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *