வடக்கு – கிழக்கு வீடமைப்புக்கு அடிக்கல் நடுகை! – தைப்பொங்கலுடன் ஆரம்பம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குரிய கல் வீட்டுத் திட்டத்தில் முதலாவது வீட்டுக்கான அடிக்கல், தைப் பொங்கல் – தை முதல் நாளான நேற்று நடப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா அடிக்கல்லை நட்டு ஆரம்பித்து வைத்தார்.

வலிகாமம் வடக்குப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தென்மயிலை, மயிலிட்டி வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீடுகள் அமைக்கும் யோசனை 2016ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. பொருத்துவீடா, கல் வீடா என்ற முரண்பாடு ஏற்பட்டது.

அதன் பின்னர் அமைச்சரவைக்குள் காணப்பட்ட பிடுங்குப்பாடு, ஆட்சி மாற்றம் என்று மிக நீண்ட இழுபறியின் பின்னர், வீடமைப்புப் பணிகள் நேற்று ஆரம்பமாகின.

10ஆயிரம் வீடுகளில் முதல் கட்டமாக 4 ஆயிரத்து 750 வீடுகள் கட்டப்படவுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சுக்கு ஊடாக இந்த வீடுகள் கட்டப்படவுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களும், கிளிநொச்சியில் 670 வீடுகளும், முல்லைத்தீவில் 630 வீடுகளும், வவுனியாவில் 450 வீடுகளும், மன்னாரில் 350 வீடுகளும், மட்டக்களப்பில் 625 வீடுகளும், திருகோணமலையில் 400 வீடுகளும், அம்பாறையில் 125 வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆயிரத்து 500 வீடுகளில், மக்கள் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட வலி. வடக்குப் பிரதேச செயலர் பிரிவுக்கு 500 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்தப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தென்மயிலை (ஜே/240) கிராம அலுவலர் பிரிவில் முதலாவது வீட்டுக்கான அடிக்கல் நடப்பட்டது.

வீட்டு உரிமையாளர், 1990ஆம் ஆண்டு போரால் இடம்பெயர்ந்து, அளவெட்டி கணேஸ்வரன் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்தனர்.

இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் 13ஆம் திகதி தென்மயிலை விடுவிக்கப்பட்ட பின்னர் குடியமர்ந்தனர்.

கொட்டிலில் கடந்த 9 மாதங்களாக வசித்து வந்த நிலையில், வீடமைப்புத் திட்டத்தில் வீடு வழங்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கான அடிக்கல்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா, யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக செயலர் சு.முரளிதரன், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ. சுகிர்தன் ஆகியோர் நட்டு வைத்தனர்.

தென்மயிலை கிராம அலுவலர் பிரிவில், மற்றுமொரு வீட்டுக்கான அடிக்கல்லும் நட்டு வைக்கப்பட்டது.

இதன் பின்னர் மயிலிட்டி வடக்கு (ஜே/246) கிராம அலுவலர் பிரிவில், போரால் இடம்பெயர்ந்து அளவெட்டி கும்பளை நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்து மீளக்குடியமர்ந்த குடும்பத்துக்கு வீடமைப்புத் திட்டத்தில் வீடு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வீட்டுக்கான அடிக்கல்லும் நேற்று நடப்பட்டது. மயிலிட்டி வடக்கில், போரால் இடம்பெயர்ந்து பருத்தித்துறையில் தங்கியிருந்து மீளக்குடியமர்ந்த பெண் தலைமைத்துவக் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட வீட்டுக்கான அடிக்கல்லும் நேற்று நடப்பட்டது.

நான்கு வீடுகளுக்குமான அடிக்கல்லை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா நட்டு வைத்தார்.

‘இடைக்கால கணக்கு அறிக்கை ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு ஆயிரத்து 500 வீடுகளே கிடைக்கப் பெற்றுள்ளன. எஞ்சியோருக்கான வீட்டுத் திட்டம், இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு அதன் ஊடாக கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கின்றோம்’ என்று யாழ். மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 ஆயிரம் பேரின் பெயர்ப் பட்டியல் வீட்டுத் திட்டத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *