மொழியுரிமையை அன்று தமிழர்களுக்கு வழங்கியிருந்தால் போர் வெடித்திருக்காது! – தாமதமாகியேனும் புதிய அரசமைப்பு வரும் என கிரியெல்ல உறுதி

“1956இல் தமிழ் மக்கள் மொழியுரிமையைத் தமக்குத் தருமாறு கேட்டிருந்தனர். அதனை வழங்கியிருந்தால் கொடூரமான போரை நோக்கி நாடு ஈடுபட்டிருக்காது.”

– இவ்வாறு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

“தாமதமாகியேனும், அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் புதிய அரசமைப்பு தயாரிக்கப்படும்” எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“வரலாற்றில் இரண்டு சந்தர்ப்பங்களில் அரசமைப்பு தயாரிக்கப்பட்டது. ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடக்கு கட்சிகள் அதில் கலந்துகொள்ளவில்லை.

சுதந்திரம் கிடைத்த பின்னர், 60 வருட காலத்தில் அரசமைப்பு வகுப்பதில் தமிழ்க் கட்சிகள் கலந்துகொள்ளாமை பாரிய பிரச்சினையாகும்.

இருப்பினும், தற்போது நிலைமை மாற்றமடைந்துள்ளது.

தற்போது நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பு புதிய அரசமைப்புக்குப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது சாதகமான நிலைமையாகும்.

பௌத்த மதத்தைப் பாதுகாத்து அதற்கு முக்கிய இடத்தை வழங்கி புதிய அரசமைப்பைத் தயாரிப்போம்” – என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *