மாகாண சபைத் தேர்தலுக்கான சட்டம் ஒரு மாதத்துக்குள் வரும்! – தமிழ்க் கூட்டமைப்பும் இணைந்து நடவடிக்கை என்கிறார் சுமந்திரன்

“மாகாண சபைத் தேர்தல்களை பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் நடத்துவதற்கான இணக்கம் தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் இடையே ஏற்பட்டுள்ளமையை அடுத்து ஒரு மாத காலத்துக்குள் இதற்குரிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பின்புல அழுத்தத்தோடு இந்தச் சட்டமூலத்தைக் கொண்டு வரும் நடவடிக்கை அவசர அவசரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் சுமந்திரன் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு:-

“காலம் தாழ்த்தப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்தச் செய்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு யாது என்ற சாரப்பட சில தினங்களுக்கு முன்னர் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கருத்தாடல் களத்திலும் என்னிடம் வினா எழுப்பப்பட்டது. அப்போது அதற்குப் பதிலளிக்கும் வாய்ப்புக் கிட்டவில்லை.

இந்தத் தேர்தல்களைக் காலதாமதமின்றி நடத்த வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு. புதிய தேர்தல் முறைமை எத்தகையதாக அமைய வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் இடையே இணக்கமில்லை என்பதால் அத்தகைய முறைமை ஒன்றை ஏற்படுத்த முடியாமல் விடயம் இழுபட்டுச் சென்றது.

இவ்வாறு விவகாரம் இழுபடுகின்றமையால் – இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைமையில் தேர்லை நடத்தலாம் என்று ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. அப்படி நடத்துவதாயின் அதற்குப் பழைய சட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

அப்படிக் கொண்டு வருவதற்கான சட்ட வாசகம் எத்தகையதாக அமைய வேண்டும் என்பது தொடர்பில் நானே ஒரு வரைவைத் தயாரித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்திருந்தேன்.

ஆனால், பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் இத்தேர்தல் நடத்தப்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டமையால் அந்த முயற்சி தடைப்பட்டிருந்தது. ஆனால், இப்போது, எப்படியும் இந்தத் தேர்தலை தாமதமின்றி நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் சு.க., அதற்காகப் பழைய தேர்தல் முறைக்கு இணங்கலாம் எனப் பச்சைக்கொடி காட்டிவிட்டது.

அதனால், இனி எந்தவிதத் தாமதமுமின்றி இத்தேர்தலை பழைய முறைமையின் கீழ் நடத்துவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பழைய தேர்தல் முறைமையைக் கொண்டு வருவதற்கான சட்டம் அடுத்த ஒரு மாதத்துக்குள் நிறைவேற்றப்படும். அது நிறைவேறிய கையோடு தேர்தல் அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடவடிக்கைகள் மும்முரமாக ஆரம்பிக்கும் என நம்புகின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *