ஒற்றுமையான வாழ்வை வலியுறுத்தும் ‘பொங்கல்!’ – பிரதமர் வாழ்த்து

“பல்வேறுபட்ட சமூகங்களின் சமய, கலாசார உரிமைகளுக்கு மதிப்பளித்து ஒற்றுமையாக வாழ்வதன் பெறுமதியை பொங்கல் வலியுறுத்துகின்றது” என்று தனது தைத்திருநாள் வாழ்த்துக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

தைத்திருநாளை முன்னிட்டு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“சிறந்த விளைச்சலை வழங்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த சூரியபகவானை வணங்கி, அதற்குப் பங்கிளிப்புச் செய்த மாடுகள் உட்பட முழு இயற்கைக்கும் நன்றிக் கடன் செலுத்தும் முதலாவது விளைச்சல் திருவிழாவைக் கொண்டாடுவது விவசாயச மூகங்களில் தொன்மைக் காலந் தொட்டு காணப்பட்டுவரும் முக்கியமானதொரு சமயவழிபாட்டு நிகழ்வாகும்.

அவ்வாறான சமயவழிபாட்டு நிகழ்வாகக் கருதப்படும் தென்னிந்தியாவில் ஆரம்பமான தைப்பொங்கல் திருநாள், தற்போது உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடும் மிகவும் முக்கியமான கலாசாரப் பண்டிகையாக மாற்றம் பெற்றுள்ளது.

தைப்பொங்கல் பண்டிகையின் அனைத்துச் சம்பிரதாயங்களும் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான சகவாழ்வினை அர்த்தமுள்ளதாக மாற்றியமைப்பதுடன், மனித சமூகத்தில் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பினை நோக்கமாகக் கொண்டு அவை நிறைவேற்றப்படுகின்றன.

இது தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி முழு உலகமக்களுக்கும் சமத்துவம் மற்றும் நன்றிக்கடன் செலுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்தியம்பும் முக்கிய சந்தர்ப்பமாகும்.

இன, மத அடிப்படைவாத சக்திகளைத் தோற்கடித்து ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்துள்ள சந்தர்ப்பத்தில், இம்முறை தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடக் கிடைத்தமை மகிழ்ச்சியான விடயமாகும்” – என்று தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் ரணில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *