மஹிந்தவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தினார் அமைச்சர்!

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய அரசமைப்பு சம்பந்தமாக விகாரைகளில் கூறும் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தையே நாடாளுமன்றில் கூறுகின்றார்.”

– இவ்வாறு தபால் மற்றும் முஸ்லிம் கலாசார அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் தெரிவித்தார்.

கண்டி மாவில்மட பிரதேசத்தில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றம் அரசமைப்பு பேரவையாகக் கூடிய சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகவும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமையும் வழங்கி செயற்படுவதாக மிகவும் தௌிவாகக் கூறினார்.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்குமாறும், மதங்களுக்கு இடையில் பேதம் ஏற்படும் வகையில் செயற்படக் கூடாது என்றும் கூறினார்.

அதற்குப் பிரதமர் உடன்பட்டார். எனவே, நாடாளுமன்றத்தில் கூறுவது போன்று மஹிந்த செயற்பட்டால் நாட்டுக்கு மேலும் பலன் கிடைக்கும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *