25 ஆண்டுகளுக்கு பின்னர் கடல் கண்காணிப்பு அணிக்கு உயிர்கொடுக்கிறது கடற்படை!

விமானப்படை 25 ஆண்டுகளுக்கு முன்னதாக, கைவிடப்பட்ட கடல்சார் கண்காணிப்பு அணியை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

1971இல் டி ஹவிலன்ட் டோவ் விமானங்களுடன் சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து, விமானப்படையின் கடல்சார் கண்காணிப்பு அணி செயற்பட்டு வந்தது.

1971 கிளர்ச்சியின் போது, பருத்தித்துறை தொடக்கம் காலி வரையான கிழக்கு கடல் பிராந்தியத்தின் ஊடாக ஆயுதங்கள் கடத்தப்படுவதைக் கண்டுபிடிப்பதற்காக- இரவுபகலாக இந்த அணி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது.

பின்னர் இந்த அணி செஸ்னா-337 விமானங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு, கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இருந்து செயற்படுத்தப்பட்டது.

1988இல் மீண்டும் சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்ட இந்த கடல்சார் கண்காணிப்பு அணி, 1993இல் செயலிழந்தது.

இந்த கடல்சார் கண்காணிப்பு அணி, வை-12 மற்றும் பீச் கிராப்ட்-200 விமானங்களுடன் 3ஆவது இலக்க கடல் கண்காணிப்பு அணி என்ற பெயருடன்,  மீண்டும் கடந்தவாரத்தில் இருந்து செயற்படத் தொடங்கியுள்ளது.

இதன் கட்டளை அதிகாரியாக விங் கொமாண்டர் விதுர பிறேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியப் பெருங்கடலின் கடல்சார் மையமாக மாறும் இலங்கையின் இலக்கை கருத்தில் கொண்டே விமானப்படையின் இந்தப் புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது.

விமானப்படையின் புலனாய்வு, கண்காணிப்பு, வேவு நடவடிக்கைகளுக்கான முக்கியமான சொத்தாக பீச் கிராப்ட்-200 விமானங்கள் உள்ளன.

2009 இற்குப் பின்னர் நவீன கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு இந்த விமானங்களின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *