அரசியலை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துங்கள் – வடக்கு ஆளுநரிடம் மனோ கோரிக்கை

” மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளுக்கு அரசியலை விட்டு விட்டு,  வடக்கில் சமூக, பொருளாதார மேம்பாட்டை  புதிய ஆளுநர் சுரேன் ராகவன்  முன்னெடுப்பார் என நம்புகிறேன்.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

ஆசாத் சாலி, சுரேன் ராகவன் ஆகிய என் இரு நெருங்கிய நண்பர்கள், மேல்மாகாணத்துக்கும், வடமாகாணத்துக்கும் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் சச்சரவுகளுக்கு அப்பால், இன்றைய நெருக்கடிகளுக்கு மத்தியில், தமிழ் பேசும் இவர்கள் இருவரும் சிறப்பாக சுழியோடி கரைசேர, மக்களையும் கரைசேர்க்க வாழ்த்துகிறேன்

ஆசாத் சாலியும், விக்கிரமபாகு கருணாரத்னவும், நானும் இந்நாட்டின் இருள் சூழ்ந்த நெருக்கடி வேளைகளில் கூட்டாக செயற்பட்டுள்ளோம். மிகவும் மோசமான அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ளோம்.

சமாதான சுதந்திரம் மீண்டும் நிலை நாட்டப்பட பின் இன்று எங்கள் பாதைகள் வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும், மீண்டும் ஒருவேளை இந்நாட்டில் இருள் சூளுமானால் நாமே களத்தில் நிற்போம்.

இன்றைய புதிய பயணத்தில் ஆளுனர் ஆசாத் சாலி தமது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி, மேல்மாகாணத்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்ட தமிழ் பேசும் மாணவரது கல்வி தேவைகளை மேம்படுத்த வேண்டும்.

அதற்கு என் அமைச்சின் பக்கபலத்துடன்,எங்கள் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் முழுமையாக துணை நிற்பார்கள் என அவருக்கு நான் தெரிவித்துள்ளேன்.

அதேபோல் நண்பர் சுரேன் ராகவன் நானறிந்த ஒரு ஆழ்ந்த சிந்தனையாளர். தமிழ், சிங்கள, ஆங்கில புலமையாளர். முன்னிலை விவகாரங்கள் தொடர்பில் காத்திரமான நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர்.

கொள்கை நிலைப்பாடுகளுக்கும், நடைமுறைக்கும் இடையில் அவர் போராட வேண்டி வரும். சொல்லொணா போர் துன்பங்களை அனுபவித்த வடக்கு தமிழ் மக்கள் தொடர்பில், அவருக்கு எனது அமைச்சின் தேசிய ஒருமைப்பாடு, சமூக மேம்பாடு விவகார அங்கங்கள் கைகொடுக்க தயாராக உள்ளதை அவருக்கு நான் அறிவித்துள்ளேன்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளுக்கு அரசியலை விட்டு விட்டு, அவர் வடக்கில் சமூக, பொருளாதார மேம்பாட்டை முன்னெடுப்பார் என நம்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *