போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணையே வேண்டும்! – சபையில் சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம்

“இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் சர்வதேச குற்றங்களே. எனவே, இதை விசாரித்துப் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி வழங்க சர்வதேச விசாரணையே வேண்டும்.”

– இவ்வாறு சபையில் இன்று வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.

“சர்வதேச விசாரணையால் நாட்டின் இறைமை ஒருபோதும் பாதிக்கப்படாது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“போர்க்காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவே பல சந்தர்ப்பங்களில் தான் சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுக்கத் தயாராக உள்ளேன் எனக் கூறியுள்ளார். அவருக்கு அந்தத் தைரியம் உள்ளதென்றால் அரசு ஏன் அஞ்சுகின்றது” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டமூலம் மற்றும் ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுதல் சட்டமூலம் குறித்த விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் ஏன் இன்னமும் உண்மைகளைக் கண்டறியவில்லை? கொலை செய்தவர்கள் ஏன் கைதுசெய்யப்படவில்லை? சட்டத்தின் முன் ஏன் நிறுத்தப்படவில்லை?

இந்த அரசு குற்றவாளிகளைத் தண்டிக்கும் நோக்கத்தில் இல்லை என்பதே உண்மையாகும்.

தமிழர்கள் என்ற காரணத்தால் அல்லது சிறுபான்மை என்ற காரணத்தால் சட்டம் சுயாதீனமாகச் செயற்படாது உள்ளமையே பிரச்சினையை ஏற்படுத்துகின்றது.

பிரதான இரண்டு கட்சிகளும் அரசியல் நெருக்கடியில் ஈடுபட்டபோது நீதிமன்றத்தை நாடிய வேளையில் சட்ட சுயாதீனம் பற்றிப் பேசினீர்கள். உங்களின் பிரச்சினையில் சுயாதீனம் பற்றிப் பேசும் நீங்கள் ஏன் தமிழர் விடயத்தில் அதே சுயாதீனம் குறித்துப் பேச மறுக்கின்றீர்கள்? இதுவே நாமும் சர்வதேசத்தை நாடக் காரணமாகவும் அமைந்துள்ளது.

இலங்கையில் அரச தரப்புக்கும் ஆயுதப் படைக்கும் இடையில் நடைபெற்ற போரில் இரண்டு தரப்பும் குற்றம் செய்துள்ளன என்று சர்வதேச நாடுகள் கூறியுள்ளன.

எனவே, குற்றத்தில் ஈடுபட்ட தரப்பு விசாரணை நடத்த முடியாது. அது சுயாதீனம் அல்ல. ஆகவே, சர்வதேச நடுநிலையுடன் விசாரணைகளை நடத்த வேண்டும்.

உண்மைகளைக் கண்டறிய வேண்டும். குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்றால் அது குறித்த உண்மைகளைத் தெரிவிக்க வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை, உண்மைகளை மூடிமறைக்கவே வெட்கப்பட வேண்டும்.

இந்த அரசு சட்டத்தையும் நீதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்ட விரும்புகின்றது என்றால் – சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் தாம் நியாயமான ஆட்சியாளர்கள் என வெளிப்படுத்த வேண்டும் என்றால் போர்க்குற்ற உண்மைகளைக் கண்டறிய சர்வதேச நடுநிலையுடன் விசாரணைகளை நடத்திக்காட்ட வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *