தமிழர்களின் அபிலாஷைகளை புதிய ஆளுநர் நிறைவேற்றுவார்! – வடக்கு அவைத் தலைவர் நம்பிக்கை

“வடக்கு மாகாணத்துக்குத் தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதால் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து அவர் செயற்படுவார் என நாம் எதிர்பார்க்கின்றோம்.”

– இவ்வாறு வடக்கு மாகாண சபை அவைத் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட சுரேன் ராகவனின் பதவியேற்பு வைபவத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்குத் தமிழ் பேசும் சமூகத்தைச் சார்ந்தவர்களே ஆளுநர்களாக நியமிக்கப்பட வேண்டுமென்ற ஒட்டுமொத்த கோரிக்கையும் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

அதற்கமையவே வடக்கு மாகாணத்துக்கு தமிழர் ஒருவர் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

ஆகையால் வடக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சுரேன் ராகவனை நாங்கள் வரவேற்றுக் கொண்டு எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்தோடு தமிழர் ஒருவர் எமது மாகாணத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டதையிட்டு நாங்கள் பெருமைப்பட்டுக் கொள்கின்றோம்.

எமது மாகாணத்தில் பல்வேறு தேவைகள், பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் சொல்லி அவருக்குத் தெரியவேண்டுமென்றில்லை.

எமது மக்களின் கோரிக்கைள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் என்ன என்பதும் அதனை எவ்வாறு நிறைவேற்ற வேண்டுமென்பதும் அவருக்குத் தெரியும்.

தற்போது மாகாண அரசியல் வெற்றிடம் இருக்கின்றது. ஆகவே, முன்னாள், இன்னாள் என்ற பேதம் பார்க்காது அவர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு அவர்களது ஆலோசனைகளையும் பெற்றுச் செயற்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.

குறிப்பாக மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இணைந்து புதிய அமைப்பொன்றை உருவாக்கியிருக்கிறோம்.

மாகாண மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக மக்களுக்காகவே அந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றது.

ஆகையால் எமது மக்களின் நலனின் அடிப்படையில் ஆளுநர் தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோது அந்த அமைப்பு ஆளுநருக்கு முழுமையான ஒத்துழைப்புக்களையும் ஆதரவுகளையும் வழங்கும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *