இறுதிப்போரில் இரசாயன குண்டு தாக்குதல்? பாதுகாப்பு அமைச்சு பதில்!

இறுதிக்கட்டப்போரின்போது இலங்கை படையினர் இரசாயன மற்றும் கொத்தணிக்குண்டு தாக்குதல்களை நடத்தினர் என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு இன்று (09) நிராகரித்தது.

அத்துடன்,  இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அனைத்துலக பொறிமுறை அவசியமில்லை என்றும் அவ்வமைச்சு அறிவித்தது.

நாடாளுமன்றத்தில் இன்று ( 09) நடைபெற்ற இரசாயன ஆயுதங்கள் சமவாயம் ( திருத்தச்) சட்டமூலம்மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன மேற்படி குற்றச்சாட்டை நிராகரித்தார்.

” போரின்போது படையினர் இரசாயனக் குண்டுகளை பயன்படுத்தினர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பியொருவர் குற்றஞ்சாட்டினார். கொத்தணிக்குண்டு பாவனை குறித்தும் கருத்து வெளியிடப்பட்டது.

இவை முற்றிலும் தவறான கருத்துகளாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் படையினர் இரசாயன மற்றும் கொத்தணிக் குண்டு தாக்குதல்களை நடத்தவில்லை.  அதற்கான எந்தவொரு ஆதரமும் இல்லை. எனவே, குறித்த குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சின் சார்பில் நிராகரிக்கின்றேன்.

இராணுவத்தினர் மனிதாபிமான அடிப்படையிலேயே செயற்பட்டனர். வடக்கில் அண்மையில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டவேளை இதை வெளிப்படையாககாணக்கிடைத்தது.

அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது. அதுவும் அவசியமில்லை.” என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *