இரட்டிப்பு மகிழ்ச்சியும்! இடிவிழுந்த கதையும்!!

மேல், கீழ் ஆளுநர்கள் நியமனங்கள்;
இரட்டிப்பு மகிழ்ச்சியும்! இடிவிழுந்த கதையும்!!
===========================================

அரசியல் கெடுபிடிகள் நாட்டை வருட்டிய 51 நாட்கள் அபிஷேகம் முடிந்து, மலர்ந்த வருடம் புத்துயிர் பெற ஜனநாயம் விடிந்தது. இருந்த போதிலும் கீரியும், பாம்பும் ஆட்சியை கவ்விய மந்திர மாயங்கள் இன்னும் வலுத்துக் கொண்டேதான் இருக்கின்றன.

அது ஒரு புறமிருக்க அமைச்சரவையை அலங்காரப்படுத்த ஐ.தே.க.வால் சூழப்பட்ட தங்க முலாமும், அமைச்சுக்களை செம்மையாக்க செயலாளர் நியமனத்தை கையிலெடுத்த ஜனாதிபதியின் வெள்ளிக் குடமும் இன்னும் வலுக்கும் புதினமாகத்தான் உள்ளது.

இழுபறிக்குள் இருந்த அரசும், இப்போதுள்ள அரசும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதை தற்போது உணரமுடிகின்றது. இவைகள் தொடரும் நிலையில் இன்று ஜனாதிபதியினால் ஆளுநர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவ் ஆளுநர் நியமனங்களில் முஸ்லிம் இருவர் நியமிக்கப்பட்டமைக்கு முதலில் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்ட நியமனம் மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கப்பட்டதாம் எனும் போது அது இன்னும் இன்னும் ஒரு படி மகிழச் செய்கின்றது.

குறித்த ஆளுநர் நியமணங்கள் ஜனாதிபதியின் அரசியல் தந்திரோபாயம் என பலரும் மனக் கண் உற்றுநோக்கின்ற இச் சந்தர்ப்பத்தில், விராலுக்கு வீசிய வலையில் திமிங்கிலம் பட்ட கதையொன்று எமது உள்நாட்டு அரசியலில் மிளிர உள்ளது.

அது எவ்வாறென்றால், மேல் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்கள் இருவரும் சம்மாந்துறையில் அ.இ.ம.கா வளர்த்த இரு வாரிசுகளின் நெருங்கிய உறவாளர்கள்.
அதாவது, பலரும் வைரலாக அறிந்த விடயம் அ.இ.ம.கா. பாராளுமன்ற உறுப்பின் எஸ்.எம். இஸ்மாயில் பல வழிகளிலும் கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். இவர் எம்.பி. ஆவதற்கு முன்பிருந்த காலம் தொட்டே அவர்களிடம் புரிந்துணர்வு, பரஸ்பரம் காணப்பட்டது.

இதே நேரம், கிழக்கு ஆளுநர் பதவியேற்பு நிகழ்வில் கட்சி குரோதங்களின் வெளிப்பாட்டை சீர்மையாக்கி, காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்திய சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் முன்னிலையில் பரவலாக பேசப்படுகின்ற விடயம் ‘கிழக்கு ஆளுநர் பதவியேற்பில் இஸ்மாயில் எம்.பி. கலந்து கொண்டராம்?!’ என்பது. அவ்வாறு அவர் பங்கேற்றிருந்தால் அது வரவேற்புக்குரியதே!

இருந்த போதிலும் இவரின் குறித்த பங்கேற்பு விடயம் பல விதங்களிலும் கட்சியில் அவருக்குள்ள பற்றாடலை சிந்திக்க தூண்டுகின்றது. ஆனாலும், இவ் விடயம் அ.இ.ம.காவின் எதிர்கால விளிம்பில் வீசப்பட்ட கத்திதான்!!

இப்படி ஒரு தீப்பற்றல் ஊடுருவுகையில், ‘எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினாற்போல…’ அசாத் சாலியின் ஆளுநர் நியமனத்தில் எது எவ்வாறாக இருப்பினும் சம்மாந்துறை பிரேதச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாதிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி இருக்கும்; என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!..

அவ்வாறு சிந்திக்க காரணம் என்னவென்றால், உண்மையிலேயே சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரிடம் அரசியல், கட்சி என்ற அடிப்படை வாதம் கிடையாது. அவர் எங்கும், எப்போதும் கூறும் விடயம் “கட்சிக்காக நான் இல்லை, மக்களுக்காகவே நான், மக்கள் தான் எனது கட்சி” என்பது!.

இவ்வாறு பல சந்தர்ப்பங்களிலும் அவர் கூறியுள்ளார். இப்படியான மனோ நிலை கொண்ட ஒருவர் யாரிடமும், எச் சந்தர்ப்பத்திலும் துணிந்து பல அபிவிருத்திகளை பெறக் கூடியவராக திகழ்வார் என்பது உளவியல் ரீதியான ஒப்பிட்டளவில் சாத்தியமே!

அது மட்டுமா? தற்போது அ.இ.ம.கா வில் போட்டியிட்டு அரசியல் இருப்பில் இருந்தாலும், அவரின் அடிப்படை அ.இ.ம.க அல்ல. அவர் அரசியலில் பரம்பரையாக பண்பட்ட ஒருவர். இந் நிலையில் இன்று வழங்கப்பட்ட ஆளுநர் நியமனம் தேசிய ஐக்கிய முண்ணனியின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இற்றைக்கு ஒரு சில வருடங்களுக்கு முன்னர் குறித்த கட்சியில் நௌஷாத் அவர்கள் தேசிய அமைப்பாளராகவும், அக் கட்சியின் வலுச் சேர்க்கும் பிரதாணியாகவும் இருந்தார் என்பதும் நாம் அனைவரும் அறிந்த விடயம்.

இவற்றை வைத்து நோக்கும் போது, எது எவ்வாறாக இருப்பினும் “உறவுகள் நெடுந்தூரம் இருந்தாலும், அன்புகள் எப்போதும் ஒட்டிக் கொண்டேதான் இருக்கும்”. ஆகையால், தற்காலத்தில் பேசப்படாத கட்சியாக இருந்தாலும் தே.ஐ.மு. வின் பிரதான பாத்திரங்களில் ஒருவர் ஆளுநராகவும், மற்றையவர் பிரதேச சபை தவிசாளராகவும் இருப்பதும் அக் கட்சிக்கொரு பெருமிதம் தான்!…

சுருங்கக் கூறின், இவையனைத்தையும் வைத்து நோக்குகையில் கிழக்கு மற்றும் மேல் ஆளுநர்கள் நியமனங்களினால் சம்மாந்துறையில் அ.இ.ம.கா. அரசியல் தவிடுபொடியாக பல வழிகளிலும் வாய்ப்புக்கள் உள்ளன.

இந் நிலைமையை கூர்மையாக சிந்திக்கையில், ‘பாலூட்டி வளர்த்த கிளி…..’ பாடல் அடிகள் நினைவுக்குள் உலாவுகின்றன.

எனவே, இந் நியமனத்தினால் ஜனாதிபதி சிறுபான்;மைக்கு வழங்கிய கௌரவத்துக்கு நன்றிகள் உரித்தாகட்டும்!. அத்துடன் புதிய ஆளுநர்களுக்கு வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!!

~ இதுதான் இரட்டிப்பு மகிழ்ச்சி!

– இரட்டிப்பு மகிழ்ச்சி ஜனாதிபதிக்கா? ! முஸ்லிம் காங்கிரஸிற்கா? !!

 

✍️ கியாஸ் ஏ. புஹாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *