வடக்கு – கிழக்கு இணைப்பு ஒருபோதும் சாத்தியமில்லை! – ஹக்கீம் திட்டவட்டம்

“வடக்கு – கிழக்கை இணைத்து தனியான நிர்வாக அலகை வழங்க இந்த அரசு முயற்சிக்கிறது என்று வதந்திகள் உலவி வருகின்றன. அந்தச் செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை.”

– இவ்வாறு நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டி, திகணை பிரதேசத்தில் விகாரையொன்றில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

:”அதிகாரப் பகிர்வின் மூலம் அல்லது வேறு ஏதாவது வழிகளின் மூலம் சுயாட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது நாடாளுமன்றத்தில் இந்த அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உதவியது வடக்கையும் கிழக்கையும் இணைத்து தனியான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவே எனும் வகையிலும் பல்வேறுபட்ட பொய்ப் பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால், இவை அனைத்தும் முற்றுமுழுதாகப் பொய்யானவையாகும்.

கடந்த வருடம் இந்த திகன பிரதேசத்தில் இடம்பெற்ற விரும்பத்தகாத இனவாதச் செயற்பாட்டின் போது அதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்த இந்திரசார விகாரையின் விகாராதிபதி கெரடிகல சந்தவிமல தேரர் செய்த பங்களிப்பினையும், அதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியையும் முஸ்லிம் சமூகம் கௌரவத்துடன் ஞாபகத்தில் வைத்துள்ளது.

இந்த அரசு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயலாற்றிக்கொண்டிருக்கும் அதேவேளை அவ்வப்போது வெவ்வேறு பிரதேசங்களில் சில அசம்பாவிதங்கள் நடைபெறுவதையும் நாம் அறிவோம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் எங்களின் மத்தியில் ஏற்படுகின்ற முரண்பாடுகளும், சரியான புரிதல் இன்மையும் பிரச்சினைகளை மேலும் வளர்ச்சியடைய காரணமாகின்றன.

இருப்பினும் இந்த சம்பவங்களுக்கு பின்னனியில் திட்டமிடப்பட்ட முறையில் செயல்பட்ட கண்ணுக்கு தெரியாத சக்திகள் இருந்து வந்ததை பின்னர் நடைபெற்ற விசாரணைகளின் போது தெளிவாகியது.

இவ்வாறான அசம்பாவிதங்களை தவிர்க்க நமக்குள் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்பட வேண்டும்.

இந்த நாட்டில் திட்டமிட்டு ஒருவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது அல்லது தொந்தரவு செய்வதனை அனுமதிக்க முடியாது. இருப்பினும் ,அரசியல்வாதிகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறான செயற்பாடுகளின் பின்புலத்தில் மறைமுக சக்திகளாக இருந்து செயற்பட்டு பொதுமக்களின் அவதானத்தை கவர்ந்திழுக்க முயற்சி செய்கின்றனர்.

கடந்த 52 நாட்களாக இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிநிலைமையோடு மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களைப் பரப்புகின்ற முயற்சியில் தற்போது இறங்கியுள்ளனர்.

இந்த நாட்டில் அரசமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டு வர முடியுமான இடத்தில் நாங்கள் இருந்து கொண்டு சட்டமன்ற செயற்குழுவொன்றை உருவாக்கியுள்ளோம்.

அதில் எங்களது கட்சியைப் போலவே ஆளும் கட்சியினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கட்சியினர் என பலர் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தச் செயற்குழுவினூடாக கலந்துரையாடல் மேற்கொண்டு அரசமைப்பில் சில மாற்றங்களை மேற்கொண்டோம். அந்த மாற்றங்களில் இந்த நாட்டில் புத்தசாசனத்திற்கு வழங்கப்பட்டுள்ள உயர்ந்த அந்தஸ்தை சிறிதேனும் குறைப்பதற்கான எவ்விதமான யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை.

பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதே அந்தஸ்தைக் குறைவில்லாமல் வழங்குவதோடு ஏனைய மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அந்தஸ்தினையும் அதே அளவில் வழங்குவதே சிறந்தது என எல்லோரும் கருத்துதெரிவித்தோம்.

இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எவ்விதத்திலும் பாதகம் ஏற்பாடாத வகையில் சில சொற்களில் திருத்தங்கள் மேற்கொள்ள நாங்கள் ஆலோசனை கூறினோம்.

சிலர் தமிழ் மொழியில் உள்ள ஒற்றுமை என்ற சொல்லுக்கான பிழையான அர்த்தத்தை கற்பித்துக்கொண்டு மக்களை தூண்டிவிட முயற்சி செய்கிறார்கள்.

இவர்களின் அரசியல் நோக்கம் கொண்ட இந்த செயற்பாடு தொடர்பில் நாங்கள் கவலையடைகிறோம்.

நாடாளுமன்ற யாப்பில் கூடுதலாக எந்த திருத்தம் கொண்டு வந்தாலும் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படவேண்டும். அப்போதுதான் அது சட்டமாக அங்கீகரிக்கப்படும்.

எனவே, பௌத்த மதத்தின் அந்தஸ்தை கேள்விக்குட்படுத்தும் எவ்விதமான திருத்தங்களும் நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

அத்தோடு நாடாளுமன்றத்தில் அதிகமாக உள்ளவர்கள் பௌத்த தர்மத்தை பின்பற்றுகின்றவர்கள். அவர்கள் இவ்வாறான ஒரு சட்டத்தை நிறைவேற்ற ஒருபோதும் உடன்படமாட்டார்கள்.

வெறும் அரசியல் உள்நோக்கங்களுக்காக மக்களை அச்சத்திற்குள்ளாக்கும் செயலாகவே இதனை பார்க்கவேண்டும்.

அரசின் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள பல்வேறுபட்ட பொய்களை இவர்கள் கூறுகிறார்கள்.

நாங்கள் வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு மக்களை ஏமாற்றுவதாக சொல்லுகிறார்கள். இவைகள் பச்சைப்பொய்.

நாங்கள் சிறுபான்மைச் சமூகத்தின் குரலாக தனித்துவமாக இயங்கி வருகின்றோம்.

எம்மை தனிமைப்படுத்தி அழுத்தங்களின்மூலம் அடிபணிய வைப்பதே இவர்களது நோக்கமாகும். ஆனால், ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார தடைகளை எமது பிரதமர் சர்வதேச நாடுகளுடன் பேசி புத்திசாலித்தனமான கொடுக்கல்,வாங்கல் மூலம் தீர்த்துள்ளார்.

அதற்கான காரணம் சர்வதேச நாடுகள் எதிர்பார்த்த, ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றங்களை இந்த அரசு செய்தமையாகும்.

இந்த நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அதனை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.

இப்போது ஏற்பட்டுள்ள தேசிய ஒருமைப்பாடு தொடர்ந்தும் எதிர்காலத்திலும் பாதுகாக்கப்படவேண்டும்.

எனவே, தவறான வதந்திகள், பொய்யான பிரசாரங்கள் தொடர்பில் நாம் கவனமாக இருக்க வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *