உலக வங்கி தலைவர் இராஜினாமா!

உலக வங்கியின் தலைவராக இருக்கும் ஜிம் யாங் கிம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு இந்தப் பொறுப்புக்கு வந்த ஜிம்மின் பதவிக் காலம் 2016ஆம்  ஆண்டு முடிவடைந்தது.
இதையடுத்து, 2ஆவது முறையாக அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவால் ஜிம் யாங் கிம் முன்னிறுத்தப்பட்டார்.
அப்பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால், இரண்டாவது முறையாக  அவரே தேர்வு செய்யப்பட்டார்.
2022-ம் ஆண்டு  பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இந்த மாத இறுதியுடன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜிம் யாங் கிம் அறிவித்துள்ளார்.
தனது பதவி விலகல் குறித்து, உலக வங்கி ஊழியர்களுக்கு ஜிம் கடிதம் அனுப்பியுள்ளார்.  ஜிம் பதவி விலகியுள்ளதன் மூலம், டொனால்டு டிரம்ப் தனது விருப்பப்பட்ட நபரை உலக வங்கி தலைவர் பொறுப்புக்கு முன்னிறுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜிம் பதவி விலகுவதை அடுத்து, உலக வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியான கிறிஸ்டாலினா ஜார்ஜிவியா  பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் கூடுதல் பொறுப்பை கவனிப்பார் என உலக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் அடுத்த தலைவரை அவ்வங்கியின் போர்டு இயக்குநர்கள் தேர்வு செய்வர். உலக வங்கியின் மிகப்பெரிய பங்குதாரராக அமெரிக்காவே உள்ளது.
189 நாடுகளை உறுப்பினராக கொண்ட உலக வங்கி, அரசுகளுக்கான நிதி உதவி அளிக்கும் மிகப்பெரும் அமைப்பாக உள்ளது. வளர்ச்சி திட்டங்கள், திட்டங்களுக்காக குறைந்த விலையில் கடன் அளித்தல் ஆகிய பணிகளை உலக வங்கி செய்து வருகிறது.
இரண்டாம் உலகப்போரின் இறுதியில் துவங்கப்பட்ட உலக வங்கியின் தலைவர்கள் அனைவருமே அமெரிக்கர்களாகவே இருந்துள்ளனர்.
இதன் சகோதர அமைப்பான சர்வதேச நிதி கண்காணிப்பகத்தின் (IMF) தலைவராக ஐரோப்பிய நாட்டவர்களே இடம் பெற்று வருகின்றனர்.
சீனா உட்பட பிற ஆசிய நாடுகள் இந்த முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொருளாதார நெருக்கடியில் சிக்கும் நாடுகளுக்கு அவசர கடன்கள் வழங்கும் அமைப்பான ஐ.எம்.எப் அமைப்பின் தலைவராக தற்போது பிரான்சு முன்னாள் நிதி அமைச்சர் கிரிஸ்டியன் லாகர்டே உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *