பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வுகாண இறுதித் தருணம்! – இதை சிங்கள மக்கள் தவறவிடக்கூடாது என்கிறார் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன்

“இந்த நாட்டில் நீடித்து இருக்கின்ற நீண்டகால இனப்பிரச்சினைக்கு இந்த ஆண்டு தீர்வு எட்டப்பட்டாகவேண்டும். தமிழ் மக்கள் சார்பில் மிக நிதானமாக, மிகப் பொறுப்போடு நாடு பிளவுபடாமல் இருப்பதை உறுதி செய்து, அர்த்தமுள்ள விதத்தில் அதிகாரங்களை மாத்திரம் பிரியுங்கள். நாட்டைப் பிரிக்கவேண்டாம் என்று கேட்கின்ற நிலையில் நாங்கள் இருக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தை சிங்கள மக்கள் நழுவவிடக்கூடாது என்று அவர்களிடத்தில் உரிமையுடன் கோரிக்கை முன்வைக்கின்றேன். இந்தச் சந்தர்ப்பம் எப்போதும் இருக்காது. அதற்காக வாய்ப்பு எப்போதும் கிடைக்காது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பருத்தித்துறை முதியோர், சிறுவர் நலன் காப்பக ராஜா ராணி சேவை இல்லத்தின் ஒளி விழாவும் பருத்தித்துறை முனைப் பகுதியில் 2018ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை சாதனையாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வும் ராஜா ராணி சேவை இல்ல மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“புதிய அரசமைப்பை வரவிடமாட்டோம் என்று பலர் மூர்க்கத்தனமாகக் குரல் கொடுத்து வருகின்றார்கள். இப்படிச் சொல்பவர்கள் யார் என்பதை நாம் முதலில் அவதானிக்கவேண்டும். ஒக்டோபர் 26ஆம் திகதி சூழ்ச்சி செய்தவர்கள்தான் குரல் கொடுக்கின்றனர்.

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழு இருந்தது. அதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள், மஹிந்த அணியைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். அவர்களும் இணைந்தே இடைக்கால அறிக்கையைத் தயாரித்தார்கள்.

ஆளுநரே வேண்டாம்
என்றவர் ஆளுநர்

இடைக்கால அறிக்கையில் 11 நிலைப்பாடுகள் எழுதப்பட்டுள்ளன. அந்த நிலைப்பாடுகளை யார் முன்வைத்தார்கள். மாகாண முதலமைச்சர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும்தான் முன்வைத்தார்கள். இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் தமது முன்மொழிவுகளை முன்வைக்கவில்லை.

முன்மொழிவுகளைச் செய்த 7 முதலமைச்சர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்கள்தான் ஆளுநரின் அதிகாரங்களை குறைக்குமாறு கேட்டார்கள். ஆளுநரே தேவையில்லை என்று வடமத்திய மாகாண முதலமைச்சராக இருந்த பேசல ஜயரட்ன கோரிக்கை முன்வைத்திருந்தார். இவ்வாறு கோரிக்கை முன்வைத்தவர்தான், ஜனாதிபதியால் ஆளுநராக கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

மஹிந்தவின்
வாக்குறுதி

மஹிந்த ராஜபக்ஷவும் புதிய அரசமைப்புக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு மூன்று தடவைகள் எழுத்தில் வாக்குறுதி கொடுத்திருந்தார். ஒரு தடவை அவரே நேரடியாக கையெழுத்திட்டார். எஞ்சிய தடவைகள் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கையெழுத்திட்டிருந்தார். அவர் எத்தகைய வாக்குறுதிகளை வழங்கியிருந்தார் என்பதை அவரது சொற்களில் கூறினால், 13ஆவது திருத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதற்கு அப்பாலும் சென்று அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவேன் என்று சொன்னார்.

13ஆவது திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளன. அவற்றை வழங்குவேன் என்று மஹிந்த வாக்குறுதி வழங்கியிருந்தார். நடைமுறையில் உள்ள 13ஆவது திருத்தம் அதிகாரத்தை அர்த்தமுள்ள வகையில் வழங்கவில்லை என்பதால், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துவேன் என்று அவர் வாக்குறுதியளித்தார்.

இப்போது ஏன் எதிர்ப்பு?

மாகாண சபைகளின் நிறைவேற்று அதிகாரம் ஆளுநர் கையிலேயே உள்ளது. அது அதிகாரப் பகிர்வு கிடையாது. மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் அதிகாரங்களைப் பயன்படுத்தவேண்டும்.

ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆளுநர் அதிகாரங்களைப் பயன்படுத்துவது அர்த்தமற்ற அதிகாரப் பகிர்வு. 13ஆவது திருத்தத்தில் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதாக காட்டிக் கொள்ளப்பட்டாலும், கொழும்பு அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. அதனாலேயே 13ஆவது திருத்தம் அர்த்தமற்ற அதிகாரப் பகிர்வு என்று மகிந்தவும் ஏற்றுக் கொண்டிருந்தார். அப்படி அதனை ஏற்றுக் கொண்டவர் இப்போது ஏன் அதனை எதிர்க்கின்றார்?

திரும்பவும் எங்கள் நாட்டில் இனவாதத்தை கிளப்பி நாட்டில் ஏற்படக் கூடிய தீர்வை, 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கின்ற இந்த அரிய சந்தர்ப்பத்தை நீங்கள் குழப்பக்கூடாது. இது விநயமாகக் கேட்டுக் கொள்கின்ற கோரிக்கை அல்ல. உரித்தோடு சிங்கள மக்களுக்கு நான் சொல்லும் விடயம்.

மக்கள் விடுதலை முன்னணி எங்களுடன் பல விடயங்களில் சேர்ந்து பயணிக்கின்றது. ஆனால், கடந்த சில தினங்களாக அவர்களும் சற்றுக் குழம்பிய நிலையிலேயே, அரசமைப்பு வருவதற்கு சந்தர்ப்பம் இல்லை. இப்போது அதனைச் செய்ய முடியாது என்ற வகையில் பேச ஆரம்பித்திருக்கின்றார்கள்.

பரப்புரையை
முறியடியுங்கள்

தேர்தல் ஒன்று வருகின்றது என்று தெரிந்தவுடன் மற்றவர்கள் இனவாதத்தை கக்குவார்கள். அது தங்களுடைய வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்ற பயத்திலே எல்லோரும் சேர்ந்து இனவாதத்தைக் கக்குவதுதான் நாங்கள் அனுபவத்திலே கண்டு கொண்ட விடயம். ஆனால், இந்தத் தடவை அதற்கு நீங்கள் பலியாகக் கூடாது என்று சிங்கள மக்களிடத்தில் உரித்தோடு கேட்கின்றோம்.

புதிய அரசமைப்பு உருவாக்குவதற்கான விடயங்களில் பங்களித்தவர்கள், உறுதிமொழி கொடுத்து இன்று அதற்கு மாறாகச் செயற்படுகிறவர்களைச் சிங்கள மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கின்றோம்.

பதவியைக் கையில் எடுப்பதற்காக, புறம்போக்காக நடப்பதற்காக, அரசியல் சூழ்ச்சியின் மூலமாக பின்கதவால் தட்டிப்பறிக்க நினைத்தது கிடைக்காமல் போன கோபத்தின் காரணமாக அவர்கள் இப்படிச் செய்வதை சிங்கள கண்டறியவேண்டும். அதை அறிந்து அவர்களின் பரப்புரைகளை சிங்கள மக்கள் முறியடிக்கவேண்டும் என்று கோருகின்றேன்.

ஆதரவை வழங்குங்கள்

இந்த ஆண்டு, நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டாக வேண்டும். தமிழ் மக்கள் சார்பிலே மிகமிக நிதானமாக, பொறுப்போடு, நாடு பிளவுபடாமல் இருப்பதை உறுதி செய்து அர்த்தமுள்ளவிதத்தில் அதிகாரங்களை மாத்திரம் பிரியுங்கள். நாட்டைப் பிரிக்கவேண்டாம் என்று கேட்கின்ற நிலையிலேயே நாங்கள் இருக்கின்றோம்.

இந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் நழுவவிடக் கூடாது என்று சிங்கள மக்களிடம் கோரிக்கை வைக்கின்றேன். இந்தச் சந்தர்ப்பம் என்றும் இருக்காது. அதற்கான வாய்ப்புக் கிடைக்காது.

இதற்காக நீங்களும் (சிங்களத் தலைவர்கள்) பங்களிப்புச் செய்திருக்கின்றீர்கள். 80 தடவைகள் வழிநடத்தல் குழு சந்தித்திருக்கின்றது. அதற்குப் பங்களித்த நீங்களே அதைத் தடுக்க முன்வரக்கூடாது.

சரித்திரத்தில் சரியான இடம் பிடிக்க வேண்டும் என்றால், இந்த முயற்சிக்கு நீங்கள் கொடுத்த ஆதரவை தொடர்ந்து கொடுக்கவேண்டும் என்று சிங்களத் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *