வெள்ளத்தினால் 43 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் வன்னியில் அழிவு

வன்னிப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால், 43 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவடைந்துள்ளன என்று அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்தமாதம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழையினாலும், குளங்கள் திறந்து விடப்பட்டதாலும், பாரிய வெள்ளம் ஏற்பட்டிருந்தது.

இதனால், முல்லைத்தீவு மாவட்டத்தில், மொத்தம் 3932 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகத்தினால் மதிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில், 10,118 குடும்பங்களைச் சேர்ந்த 10,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 2,297 ஏக்கர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன.

அத்துடன், 11,237 கால்நடைகள் அழிந்துள்ளன. 24 மீன்பிடிப் படகுகளும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட அழிவுகள் தொடர்பான இறுதி அறிக்கை அடுத்தவாரம் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலா 15 பேர் கொண்ட 6 குழுக்கள் உருவாக்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலகப் பகுதிகளில் ஏற்பட்ட அழிவுகள் தொடர்பாக,  மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, இரண்டு வாரங்களில் சேத மதிப்பீடுகள் நிறைவடையும் என்றும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாய, கிராமிய பொருளாதார, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன மற்றும் மீன்பிடி அமைச்சர் பி ஹரிசன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று நடத்திய கூட்டத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *