முஸ்லிம் ஆளுநர்கள் நியமனத்தின் பின்னணி என்ன?

இரண்டு முஸ்லிம் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டமை முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம்.அந்த ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை வைத்துத்தான் இந்த மகிழ்ச்சி தீர்மானிக்கப்பட வேண்டும்.
ஆளுநர்கள் என்பவர்கள் அந்தந்த மாகாணங்களுக்கான ஜனாதிபதிகள்.மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர்களைக்கூட கட்டுப்படுத்தக்கூடியவர்கள்.ஆனால், நடைமுறையில் இந்த அதிகாரத்தில் பாரபட்சம்  உண்டு.
வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு நியமிக்கப்படுகின்ற ஆளுநர்களின் அதிகாரங்களும் ஏனைய மாகாணங்களுக்கு நியமிக்கப்படுகின்ற ஆளுநர்களின் அதிகாரங்களும் ஒன்றுக்கொன்று முரணானவை.
வடக்கு-கிழக்கு ஆளுநர்கள் முழுமையான அதிகாரங்கள் கொண்டவர்களாகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர்கள் டம்மிகளாகவும் இருக்கின்றனர்.
ஆனால்,வடக்கு-கிழக்கிற்கு வெளியே உள்ள ஆளுநர்கள் டம்மிகளாகவும் முதலமைச்சர்கள் அதிகாரமிக்கவர்களாகவும் இருக்கின்றனர்.
வடக்கு-கிழக்கு முதலமைச்சர்கள் சிங்களவர்களாக இருந்தால் இந்த ஆளுநர்களும் டம்மிகளாகவே இருப்பர்.
இங்கு வாழ்கின்ற சிறுபான்மை இன மக்களின் கைகளுக்கு மாகாண அதிகாரங்கள் முழுமையாகப் போய்விடக்கூடாது என்ற நோக்கிலேயே ‘சிங்கள நிறைவேற்று அதிகாரம்’ சிறுபான்மை முதலமைச்சர்களைக் கட்டுப்படுத்த அதிகாரமிக்க சிங்கள ஆளுநர்களை நியமிக்கின்றது.
இப்போது முதல் தடவையாக கிழக்கிற்கு முஸ்லிம் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டார் என்பதற்காக மாகாண அதிகாரங்கள் சிறுபான்மை இன மக்களின் கைகளுக்கு முழுமையாக வந்துவிடும் என்று அர்த்தமல்ல.
இந்த ஆளுநரால் ஜனாதிபதியின் உத்தரவை மீறி தன்னிச்சையாக செயற்பட முடியாது.
இவர் ஜனாதிபதியின் பிரதிநிதியே தவிர முஸ்லிம்களின் பிரதிநிதியும்  அல்ல கிழக்கு மாகாண சிறுபான்மை இனங்களின் பிரதிநிதியும் அல்ல.
இந்த ஆளுநர் பதவியின் ஆயுட் காலம் அநேகமாக ஒரு வருடமாகத்தான் இருக்கப் போகின்றது.
அந்த ஒரு வருடத்துக்குள் தமிழ்-முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் வேலையில்லா பிரச்சினை,சிறுபான்மை இனங்களிடையே முறுகளை தோற்றுவிக்கின்ற காணிப் பிரச்சினை,இடைநடுவில் நிற்கின்ற அபிவிருத்திப் பணிகள் தொடர்பான பிரச்சினை என ஓரிரு பிரச்சினைகளையாவது இவரால் தீர்த்து வைக்க முடிந்தால் அதுவே போதுமானது.
இவ்வாறான பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்போதுதான் முஸ்லிம் ஆளுநர் நியமனம் தொடர்பில் முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைய முடியும்.
ஆனால்,ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பவர் அபிவிருத்தியின் புலியான ஹிஸ்புல்லாவாக இருப்பதால் அவரின் விசேட திறமை காரணமாக சில முக்கியமான மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று நம்பலாம்.
அவ்வாறு மாற்றங்கள் ஏற்படுமாக இருந்தால் அது முஸ்லிம்கள் மாத்திரமன்றி தமிழர்களும் சிங்களவர்களும் மகிழ்ச்சியடையக்கூடியதாக-நன்மை அடையக்கூடியதாக அமைய வேண்டும்.
[எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர் ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *