அரச துறைகள் முடக்கம் ஒருவருடம் கூட நீடிக்கும்! – டிரம்ப் எச்சரிக்கை

அரச துறைகள் முடக்கம் ஒருவருடம் கூட நீடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய கனவு திட்டமான அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்பதில் விடாப்பிடியாக உள்ளார். இதற்காக அவர் உள்நாட்டு நிதியில் 5 பில்லியன் டொலர் வழங்க வேண்டும் என்று, அமெரிக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தி வருகின்றார்.

ஆனால், மெக்சிகோ எல்லைச்சுவருக்காக நாட்டு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக்கூடாது, அத்தோடு அந்தத் திட்டத்தையே இரத்துச் செய்ய வேண்டும் என்பதில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி உறுதியாக உள்ளது.

இதனால் செலவின மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்தது. குடியரசு கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட செலவின மசோதா, செனட் சபையில் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் ஆதரவை பெறத் தவறியதால் நிறைவேற்ற முடியாமல் போனது.

இதன் காரணமாக வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை உள்ளிட்ட 9 துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் அந்தத் துறைகள் முடங்கின.

மெக்சிகோ எல்லை சுவர் விவகாரத்தில் டிரம்புக்கும் ஜனநாயக கட்சியினருக்கும் சமரசம் ஏற்படாததால் அரசு துறைகள் முடக்கம் 2 வாரங்களைக் கடந்து நீடிக்கின்றது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் பேட்டி அளிக்கையில்,

“எல்லையில் சுவர் கட்டுவதற்காவும், நாட்டைப் பாதுகாக்கவும்தான் நாங்கள் இந்த விடயத்தை முன்னெடுத்துள்ளோம். இதற்காக மாதங்கள் அல்ல வருடக்கணக்கில் கூட அரச அலுவல்களை முடக்குவோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *