தடைகளையும் தாண்டி ஐயப்பனை தரிசித்தார் இலங்கைப் பெண்! – கேரளாவில் பெரும் பரபரப்பு

இலங்கை பெண்ணொருவர் உட்பட சபரிமலையில் இதுவரை 10 பெண்கள் ஐயப்பனை தரிசித்துள்ளனர் என்று கேரள பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவு கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பக்தர்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் இளம்பெண்கள் பலரும் அணி, அணியாய் சபரிமலைக்கு சென்றனர்.

இதனால் சபரிமலையில் பதட்டமான நிலை உருவானது. சன்னிதானம் வரை சென்ற பெண்கள் 18-ஆம் ம்படி ஏறாமல் திரும்பும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து கேரள பொலிஸார் சபரிமலை செல்ல விரும்பிய பெண்களை இரகசியமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். அதன்படி, கடந்த 2ஆம் திகதி  பிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்கள் சபரிமலை சென்று 18ஆம்படி ஏறாமல் பின்பக்க வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

பிந்து, கனகதுர்கா இருவரும் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. முதன்முதலாக இளம்பெண்கள் ஐயப்பனை தரிசித்ததாகவும் கூறப்பட்டது.

பிந்து, கனகதுர்காவை தொடர்ந்து நேற்று இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் சசிகலா என்பவரும் ஐயப்பனை தரிசித்ததாக தகவல் வெளியானது. இவர், 18ஆம் படி ஏறி சென்றதாகவும் கூறப்பட்டது.

இது உண்மைதான் என்று பொலிஸார் கூறினர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தந்திரிகள் தெரிவித்தனர்.

இந்த குழப்பத்தை போக்க சன்னிதானத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், பெண் ஒருவர் இருமுடி கட்டுடன் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அந்த பெண் சசிகலாதானா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

இதற்கிடையே இலங்கை பெண் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த தகவலை முதல்-மந்திரி பினராயி விஜயன் அலுவலகம் உறுதி செய்தது. இந்த தகவல் வெளியானதும் போலீசார் இன்னொரு தகவலை வெளியிட்டனர்.

சசிகலா, சாமி தரிசனம் செய்ததை உடனடியாக தெரிவித்தால் அவரது பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்படும் என்பதாலேயே அவரை பத்திரமாக விமான நிலையத்தில் இறக்கிவிட்ட பின்பு இந்த தகவலை வெளியிட்டதாக தெரிவித்தனர்.

கேரள போலிஸார் மேலும் இதுபற்றி கூறும்போது, சபரிமலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மலேசியாவைச் சேர்ந்த 25 பேர் கொண்ட குழுவினர் சபரிமலை வந்ததாகவும், அதிலும் 3 இளம்பெண்கள் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இந்த இளம்பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசித்ததாக கூறினர். இவர்களையும் சேர்த்து இதுவரை 10 இளம்பெண்கள் ஐயப்பனை தரிசித்துள்ளதாகவும் கூறினர்.

இளம்பெண்கள் பலரும் அடுத்தடுத்து சாமி தரிசனம் செய்து வரும் நிலையில் இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர தயாராக இருக்கும் தகவலையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *