வவுணதீவு சம்பவம்: விசாரணையைத் திசை திருப்ப முயன்றவருக்குத் தடுப்புக்காவல்!

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இடம்பெற்றுவரும் விசாரணையைத் திசை திருப்ப முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, 90 நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

​இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன எனவும் அந்த அதிகாரி கூறினார்.

வவுணதீவு, வலையிறவு பாலத்துக்கு அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில், கடந்த வருடம் நவம்பர் மாதம் 19ஆம் திகதி நள்ளிரவு கடமையில் இருந்த பொலிஸார் இருவர், இனந்தெரியாதோரால் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசிங்கா தலைமையிலான சி.ஜ.டியினர் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில், கரையக்கந்தீவைச் சேர்ந்த 31 வயதுடைய ஜோச் நிரஞ்சன் என்பவர், இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரியும் என சி.ஜ.டியினரிடம் தெரிவித்துவிட்டு, பின்னர் தெரியாது என விசாரணையைத் திசைதிருப்பியுள்ளார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அந்நபரை, சி.ஜ.டியினர் பொலிஸ் தடுப்புக் காவலில் எடுத்து விசாரிக்க தீர்மானிக்கப்பட்டு, அவரைக் கைது செய்து, 90 நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் கரையக்கந்தீவைச் சேர்ந்த கண்ணன் என அழைக்கப்படும் கதிர்காம தம்பிராசா குமரன் எனப்படும் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறை உத்தியோகத்தரான அஜந்தன் என்பவர் கைதுசெய்யப்பட்டு, அவரிடமிருந்து வெளிப்படுத்தப்பட்ட தகவலுக்கமைய புலிகளின் சார்ள்ஸ் அன்டனி படைப்பிரிவில் கடமையாற்றிய கிளிநொச்சியைச் சேர்ந்த 48 வயதுடைய இமையன் எனப்படும் வாசலிங்கம் சர்வானந்தன கைதுசெய்யப்பட்டு இருவரும் 90 நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

(கனகராசா சரவணன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *