அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை! – அமைச்சரவைக் கூட்டத்தில் மனம் திறந்தார் மைத்திரி

“அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் நான் ஈடுபடவில்லை. இனிமேல் ஈடுபடப்போவதும் இல்லை.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டுக்கான புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று ( 02) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது புத்தாண்டு வாழ்த்துகளை முதலில் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறுகிய உரையொன்றை நிகழ்த்தினார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அமைச்சுகளுக்கான நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் ஒதுக்கப்பட்டுள்ள விதம் தொடர்பில் சில அமைச்சர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இது விடயத்தில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது.

எந்தெந்த அமைச்சின் கீழ் எந்தெந்த அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் வரவேண்டும் என்ற பட்டியலை பிரதமர்தான் எனக்கு அனுப்பியிருக்க வேண்டும்.

அந்தப் பட்டியல் கிடைக்காத காரணத்தினாலேயே, புத்தாண்டில் அமைச்சுகள் இயங்க வேண்டும், மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதால் ஜனாதிபதி செயலக அதிகாரிகளின் உதவியுடன் விடயதானங்கள் ஒதுக்கப்பட்டன” – என்றார்.

இதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

“வருட இறுதியில் உங்களுக்கு நிறைய வேலைகள் இருந்திருக்கும். அதைக் கருதிதான் நான் அனுப்வில்லை” என்று கூறியதுடன், புதிய பட்டியலையும் ஒப்படைத்தார்.

இதன்பிரகாரம் அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *