சாவிக்கொத்து அரசியல்!

‘மாமி உடைத்தால் மண்குடம்…மருமகள் உடைத்தால் பொன்குடம்…’ என்ற நிலையிருக்கும் வீட்டில் மாமியும், மருமகளும் கீரியும், பாம்பும்போலவே வாழ்வார்கள் – வலம்வருவார்கள்.

சட்டி பானை கழுவுதல் முதல் சமையல்வரையான அனைத்து விடயங்களிலும் முரண்பாடுகள் தலைவிரித்தாடும். வாய்ச்சண்டைக்கும் பஞ்சமிருக்காது.
இப்படியான வீட்டில் சாவிக்கொத்தானது மாமி வசமே இருக்கும். எந்தவொரு சூழ்நிலையிலும் தாமாக முன்வந்துஅதை மருமகளிடம் ஒப்படைக்க மனம் இடமளிக்காது.
வீட்டுக்குள் இருக்கும்போதுகூட சாவிக்கொத்தை இடுப்பிலேயே சொருவிவைத்திருப்பார் மாமி. வெளி இடங்களுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால்கூட வீட்டில் தனக்கு விசுவானமான ஒருவரிடமே அது கையளிக்கப்படும்.
அப்படியும் இல்லாவிட்டால் பக்கத்து வீட்டாரிடம் ஒப்படைக்கப்படும்.
மறுபுறத்தில் வீட்டின் அதிகாரத்தை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் மருமகளும் குறியாகவே இருப்பாள். சாவிக்கொத்தும் தன்வசம் வந்துவிடவேண்டும் என்பதற்காக வழிமீது விழிவைத்து காத்திருப்பாள்.
படைகள் இன்றி, துப்பாக்கிகள் இன்றி நடைபெறும் இந்த உள்ளகப்போரை அவ்வளவு இலகுவில் முடிவுக்கு கொண்டுவந்துவிடமுடியாது. எனினும், குடும்ப நலன், தன்மானம் கருதி சண்டை என்பது சந்திரக்கு வராது. சாவிக்கொத்தும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படாது. இது மாமி – மருமகள் சண்டை. சமகால சீரியல்களில் இதை வெளிப்படையாக கண்டு மகிழலாம்.
இதேபாணியில்தான் சுதந்திரக்கட்சிக்குள்ளும் தற்போது அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது.
சுதந்திரக்கட்சியை முழுமையாகக் கைப்பற்றுவதற்கு சந்திரிக்கா அம்மையார் தலைமையிலான குழுவொன்று தயாராகி வருகின்றது என்றும் இதன் முதற்கட்டமாக கட்சி தலைமையகம் முற்றுகையிடப்படவுள்ளது என்றும் தகவல் வெளியானதையடுத்து கிலிகொண்டார் மைத்திரி.
தான் வெளிநாட்டில் இருப்பதால் சாவிக்கொத்தை உடனடியாக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு, தனது விசுவாசியான கட்சியின் செயலாளருக்கு கட்டளை பிறப்பித்தார் ஜனாதிபதி மைத்திரி.இதன்படி சாவி மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல, சந்திரிக்காவுக்கு விசுவாசமாக செயற்படும் ஆளுநர்களையும் பதவியை விட்டு தூக்குவதற்கு மைத்திரி நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காகவே ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறு பணிப்புரை விடுத்தார்.
சு.க. தலைமையகத்தின் சாவிக்கொத்து சந்திரிக்காவின் கைகளுக்குள் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. (வீடும், நாடும் ஒன்றென கருதியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.)
தனிநபருக்கு அஞ்சி சாவிக்கொத்தை பொலிஸில் ஒப்படைப்பது குழந்தை அரசியலின் உச்சகட்டமாகும். ( தலைமைத்துவத்துக்கு ‘கட்ஸ்’ இல்லையா?
அதுவும் இலங்கையை ஆண்ட பிரதான இரு கட்சிகளில் ஒன்றான சுதந்திரக்கட்சிக்குள் சிறுபிள்ளைத்தனமான சம்பவங்கள் அரங்கேறுவதை கோமாளி அரசியல் என கூறுவதைத்தவிர வேறு எப்படி விளிப்பது?
( நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று – பல தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற கட்சி, சிறுகட்சிபோல் செயற்பட எத்தனிப்பது எந்த வகையான அரசியல் ‘டிசைனாகும்’?
நாட்டுக்கும் தலைமை வழங்கமுடியவில்லை, கட்சிக்கும் சிறந்த தலைவராக இருக்கமுடியவில்லை என்பது தெட்டத்தெளிவாக உறுதியாகிவிட்டது. எனவே, அரசியலுக்கு ‘குட்பாய்’ சொல்வதைவிட ‘அவருக்கு’ வேறு தேர்வு இல்லை என்பதையே சமகால அரசியல் நிலைவரங்கள் உணர்த்தி நிற்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *