அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை! புத்தாண்டு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி!!
அமெரிக்கா தனது வாக்குறுதிகளை காப்பாற்ற தவறினால் வடகொரியா புதிய வழிமுறையை நாட வேண்டி இருக்கும் என அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் எதிர் எதிர் துருவங்களாக விளங்கி வந்தனர். இருவரும் தொடர்ந்து வார்த்தை மோதலில் ஈடுபட்டு வந்தனர்.

உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதோடு, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா செயல்படும் என கிம் ஜாங் அன் உறுதிமொழி அளித்தார்.
அதன்படி வடகொரியா மேற்கொண்ட நடவடிக்கைகள் இரு நாட்டு உறவில் நீடித்து வந்த பதற்றத்தைத் தணித்து இணக்கமான சூழலை உருவாக்கியது.
எனினும் அமெரிக்கா தங்கள் மீது விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளை விலக்கி கொள்ள வேண்டும் எனவும்,
அப்படி செய்யாத பட்சத்தில் மீண்டும் தாங்கள் அணு ஆயுத கொள்கைக்கு திரும்புவது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டி இருக்கும் எனவும் வடகொரியா கூறி வருகிறது.
இந்த நிலையில், புத்தாண்டையொட்டி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக பேசினார். அவர் பேசியதாவது:-
கடந்த ஆண்டு டிரம்புடன் பேச்சு வார்த்தை நடத்திய பின் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
அதே சமயம் அமெரிக்காவும் உண்மையாக நடந்துகொண்டு, உரிய நடவடிக்கைகளை எடுத்தால் அமெரிக்கா-வடகொரியா உறவு வேகமாக வளரும்.
மாறாக ஒட்டுமொத்த உலகத்தின் முன்னிலையில் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றத் தவறும் வகையில் அமெரிக்கா, வடகொரியாவுக்கு நெருக்கடிகளை அளித்து, பொருளாதாரத் தடைகளை விதிக்க முயற்சித்தால்
எங்கள் நாட்டின் இறையாண்மையையும், நலன்களையும் பாதுகாக்க புதிய நடவடிக்கைகளை கையாளுவதை தவிர வேறுவழியில்லை. (அதாவது அணு ஆயுத கொள்கைக்கு திரும்புவோம் என்பதை தான் அவர் இப்படி குறிப்பிட்டார்.
கொரிய தீபகற்பத்தை அணுஆயுதம் இல்லா மண்டலமாக மாற்றவும், நிரந்தரமான, நிலையான, அமைதியான ஆட்சியை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச சமூகம் வரவேற்கும் வகையில், எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன்.
தென்கொரியா-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடக்கூடாது. கூட்டு ராணுவ பயிற்சிதான் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட மூலக்காரணம்.
எனவே தென்கொரியா-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலை தொடர வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் புத்தாண்டு உரையை தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில்,
வடகொரிய தலைவரின் பேச்சு கொரிய தீபகற்பத்தை அணுஆயுதம் இல்லா மண்டலமாக மாற்ற வேண்டும் என்பதில் அவர் தீர்க்கமாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.