கிழக்கு ஆளுநராக மீண்டும் ரோஹித்தவே நியமிக்கப்பட வேண்டும்:

கிழக்கு ஆளுநராக மீண்டும் ரோஹித்தவே நியமிக்கப்பட வேண்டும்:

~ சுபையிர் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

================================================================

கிழக்கு மாகாண ஆளுநராக மீண்டும் ரோஹித்த போகொல்லாகமவையே நியமிக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏறாவூர் பிரதேச அமைப்பாளருமான எம்.எஸ்.சுபையிர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் அடிப்படை வசதியற்ற குடும்பங்களுக்கு மலசலகூடங்களை அமைத்துக்கொள்வதற்கு காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று (31) ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வீ.யூசுப் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“ரோஹித்த போகொல்லாகம கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாணம் பல்வேறு ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் புல்மோட்டை தொடக்கம் பானமை போன்ற பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாகாணத்தின் சகல பகுதிகளுக்கும் நேரடியாக விஜயம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து பணியாற்றினார்.

கிழக்கிலே வாழுகின்ற மூவின மக்களும் திருப்திகொள்ளும் வகையில் நிதி ஒதுக்கீடுகளை செய்து பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டார். விசேடமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய கிரமாங்களை அபிவிருத்தி செய்து அந்த மக்களுடைய வாழ்வாதரங்களை முன்னேற்றுவதிலே அவர் விசேட கவனம் செலுத்தி செயற்பட்டார்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மூவின மக்களும் நன்மையடையும் வகையில் கூடுதலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் நிதி ஒதுக்கீடுகளை செய்தார். அந்த அடிப்படையில் ஏறாவூர் பிரதேசத்தில் வீதிகளை நிர்மாணிப்பதற்கு ஒரு கோடி ரூபா நிதியினையும், கிராம எழுச்சித்திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபா நிதியினையும், அடிப்படை வசதியற்ற மக்களுக்கு மலசலகூட வசதிகளை அமைப்பதற்கும் இவ்வருடம் நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளார். இன்னும் பல அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதிகளை வழங்குவதற்கு நடிவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற மக்களின் தேவைகளை அறிந்து கிழக்கு மாகாண ஆளுநர் பணியாற்றி வருகிறார். கிழக்கு மாகாண ஆளுநர் ஒரு மூத்த அரசியல்வாதியாவார். அவர் முக்கிய பல அமைச்சுக்களை வகித்து மக்களுக்கு சேவையாற்றிய ஒருவர். மக்களுடைய தேவைகள், கஸ்டங்களை உணர்ந்தவர். அப்படியான ஒருவரே கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும். ஆகவே ஜனாதிபதி அவர்கள் மீண்டும் கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித்த போகொல்லாகமவை நியமிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது எமது நாட்டில் அரயல் நெருக்கடி சூழ்நிலை ஏற்பட்டிருந்தும் ஆளுநர் அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அதிகாரிகளை அழைத்து அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்தார்.

கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு ஒரு வருடங்களுக்கு மேலாகியும் எந்த வேளையிலும் கிழக்கு மாகாண நிருவாகத்தில் தளம்பல் ஏற்படாமல் நிருவாகத்தை திறம்பட செய்தார். தற்போது பிறந்திருக்கின்ற புதிய ஆண்டில் ஜனாதிபதி மாகாணங்களின் ஆளுநர்களை புதிதாக நியமிக்கின்ற ஒரு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண ஆளுநராக மீண்டும் ரோஹித போகொல்லாகமவை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

தற்போது கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு ஒரு வருடத்தினை தாண்டியும், தேர்தல் நடாத்தப்படவில்லை. தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் இல்லாத சூழ்நிலை காணப்படும் இக்காலகட்டத்தில்; எந்தெவொரு சிறுபான்மை கட்சியும் இது தொடர்பில் கவனம் செலுத்தவுமில்லை, பேசவுமில்லை. இன்று ஜனநாயகம் பற்றி பேசுகின்ற சிறுபான்மை கட்சிகள் கிழக்கு மாகாண சபை தேர்தல் பற்றி அசட்டையாக இருப்பது வியப்பாகவுள்ளது. எனவே கிழக்கு மாகாண மக்களின் நலன் கருதி மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு சகல சிறுபான்மை கட்சிகளும் கோரிக்கை விடுக்க வேண்டும். கிழக்கு மாகாண சபை தேர்தல் மிக விரைவில் நடாத்தப்பட வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *