ஒரு தரப்பை தீவிரமாக எதிர்த்துக்கொண்டு தமிழருக்கான தீர்வைக் காணவே முடியாது!

“சிங்களப் பேரினவாத அரசியல் அணிகள் இரண்டினதும் அதிகாரப் போட்டிக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புகுந்து விளையாடுவதன் ஊடாக இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்ற சிந்தனை நடைமுறைச் சாத்தியமானது அல்ல. இரண்டு பிரதான சிங்களப் பேரினவாதக் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் அரசியல் தீர்வை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது. இந்த யதார்த்தமான நிலைமையில் பிரதான சிங்களக் கட்சிகளில் ஒன்றைத் தீவிரமாக எதிர்த்தபடி தமிழர் தரப்பு அரசியல் தீர்வைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுள் ஒன்றான ரெலோ அமைப்பின் பொதுச் செயலர் ந.சிறிகாந்தா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“உக்கிரமான அதிகாரப்போட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் புகுந்து விளையாடுவதன் ஊடாக இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்ற சிந்தனை நடைமுறைச் சாத்தியமானது அல்ல.

அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு அரசமைப்பு மாற்றப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. அது மட்டுமன்றி பொது வாக்கெடுப்பு மூலம் அனுமதி பெறப்பட வேண்டும்.

இரண்டு சிங்களப் பேரினவாதக் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் அரசியல் தீர்வை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது.

இந்த யதார்த்தமான நிலைமையில் பிரதான சிங்களக் கட்சிகளில் ஒன்றை தீவிரமாக எதிர்த்தபடி தமிழர் தரப்பு அரசியல் தீர்வைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

கைகொடுத்த கூட்டமைப்பு

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமித்தது அரசமைப்புக்கு முற்றிலும் விரோதமானது என்ற அடிப்டையில்தான், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்ஷ நீடித்து கொண்டிருந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்து, பெரும்பான்மை ஆதரவை நிருபிக்கும் அவரின் நடவடிக்கைக்கு கூட்டமைப்பு கைகொடுத்தது.

நிகழ்ந்து முடிந்த அரசியல் நெருக்கடியில் கூட்டமைப்பின் நிலைப்பாடு, தீர்மானிக்கும் சக்தியாக அதனை நிலைநாட்டியது.

திருப்திப்படுத்தாது

கூட்டமைப்பின் ஆதரவில் தங்கி நிற்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு அரசியல் தீர்வுத் திட்டத்தை விரைவில் முன்வைக்கப் போவதாக கூறிக் கொண்டிருக்கின்றது. அதே நேர்த்தில் ஒற்றையாட்சி அரசமைப்பையும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமையையும் வலியுறுத்தி நிற்கின்றது.

ரணில் விக்கிரமசிங்க எந்தவொரு சந்தேகத்துக்கும் இடமளிக்காமல் தனது நிலைப்பாட்டை தொடர்ந்து கூறி வந்துள்ளார்.

அரசியல் தீர்வுப் பொதியை அரச தரப்பு முன்வைத்தாலுங் கூட, தமிழ் இனத்தின் நீண்ட கால எதிர்பார்ப்புக்களை அது திருப்திப்படுத்தப்போவதில்லை என்பது வெளிப்படையானது.

யதார்த்தம் வேறு

அரசியல் நெருக்கடியின் போது கூட்டமைப்பு கைக்கொண்ட நிலைப்பாட்டினால் சிங்கள மக்களின் மனங்கள் வெல்லப்பட்டிருப்பதாக அமைச்சர்கள் பேசி வருகின்றார்கள். கேட்பதற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் யதார்த்தம் வேறாகவே உள்ளது.

சிங்களப் பேரினவாதக் கட்சிகளின் அரசியல் பாரம்பரியத்தின் வழியில் இனவாதக் கோஷத்தை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணி கையில் எடுத்துக் கொண்டுள்ளது.

பொதுத்தேர்தல் ஒன்றில் அந்த அணி வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புக்கள் இப்போதும் பிரகாசமாகவே உள்ளன. இந்த அரசியல் அணியை புறந்தள்ளிவிட்டு அரசியல் தீர்வு பற்றி சிந்திப்பதும் பேசுவதும் விவேகமானது அல்ல.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் இப்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுள்காலம் முடிவதற்குள் அரசியல் தீர்வு நடவடிக்கைகளில் ஆக்கபூர்வமான திருப்பங்கள் எதற்கும் இடமிருக்கப் போவதில்லை என்று அடித்துக் கூற முடியும்.

பிரதியீடு என்ன?

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மீண்டும் அரசு அமைக்கப்படுவதற்கும் நிலைத்து நிற்பதற்கும் கைகொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டமைப்பின் முன்னால் அரசியற் சவால் இப்போது எழுந்து நிற்கின்றது.

அரசியல் தீர்வு விடயத்துக்கு அப்பால், அரசைக் காப்பாற்றி நிற்பதற்கான பிரதி ஈடாக கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எதனை பெற்றுக் கொடுக்க முடியும் என்பதே அதுவாகும்.

காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பவற்றை அரசியல் அழுத்தத்தோடு கையாளவேண்டிய அதே நேரத்தில் அரசமைப்பு பின்பற்றப்பட்டே ஆக வேண்டும் என்ற பொதுவான நிலைப்பாட்டை அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளைப் போலவே தானும் கொண்டிருக்கும் கூட்டமைப்பு, அதே அரசமைப்பின் கீழ், அதன் 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் அமைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு உரிய காணி மற்றம் பொலிஸ் அதிகாரங்கள், முப்பது வருடங்கள் கழிந்த நிலையில், இனியாவது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை தீவிரமாக வலியுறுத்தி சாதித்ததாக வேண்டும்.

ஒளிவுமறைவு தேவையில்லை

கூட்டமைப்பின் நிலைப்பாட்டினால் ஒரு பகுதி சிங்கள மக்களின் மனங்களாவது வெல்லப்பட்டுள்ளன என்றால், அரசமைப்புக்கு அமைவான இத்தகைய நடவடிக்கையில் ஒளிவு மறைவு எதுவும் இருக்க வேண்டியதில்லை.

கூட்டமைப்பின் ஆதரவில் தங்கியுள்ள அரசு அடுத்துவரும் இரண்டொரு மாதங்களுக்குள் நல்லெண்ண அடிப்படையில் தமிழ் மக்களின் மிகவும் நியாயமான சில கோரிக்கைகளையாவது நிறைவேற்றத் தவறுமானால், தொடர்ந்தும் அரசுக்கு முண்டு கொடுப்பதை கூட்டமைப்பு மறந்தே ஆக வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளின் பின்னால் உள்ள அவசியம், அவசரம் என்பனவற்றோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுயமரியாதையும் இவற்றுடன் சம்பந்தப்பட்டுள்ளது.

எனவேதான் சமரசம், விட்டுக்கொடுப்பு என்பனவற்றுக்கு இடமிருக்க முடியாது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *