வாக்குறுதியை நிறைவேற்றாவிடின் ரணில் அரசுக்கு சிக்கல் ஏற்படும்! – எச்சரிக்கின்றார் இராதா

“மலையக மக்கள் முன்னணிக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீறி​ விட்டார்.”

– இவ்வாறு குற்றஞ்சாட்டினார் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட எம்.பியுமான வே.இராதாகிருஷ்ணன்.

“வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடின் இந்த அரசுக்கு அது சிக்கலாகும்” எனவும் அவர் எச்சரித்தார்.

“அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்றைத் தனக்கும், பதுளை மாவட்ட எம்.பியான அ.அரவிந்குமாருக்கு பிரதி அமைச்சர் பதவி​யொன்றையும் வழங்குவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்தார். அவையிரண்டும் நிறைவேற்றப்படவில்லை” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மலையக மக்கள் முன்னணியின் அடுத்தகட்ட நகர்வு தொடர்பில், மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு, ஹட்டனில் நேற்று (30) நடைபெற்றது.

அதில், கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர்​ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியை எனக்கு வழங்காமைக்கான காரணம் தொடர்பில், பிரதமருடன் பேச்சு நடத்தினேன்.

அந்தப் பேச்சின்போது, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுப் பதவியொன்றை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்கரமசிங்க இதன்போது உறுதிமொழி வழங்கினார்.

எனினும், மக்களுக்காக வேலைசெய்யமுடியாத, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுப் பதவியை வழங்குவார்களாயின், அதனை பொறுப்பேற்கமாட்டேன்.

தற்போதைய அரசில், அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னர், அந்தந்த அமைச்சுகளுக்குரிய விடயதானங்களை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடும்போது, பல்வேறான சிக்கல்கள் ஏற்பட்டன.

பிரதமரும் ஜனாதிபதியும் இணைந்து செயற்படாமையால்தான் இவ்வாறான சிக்கல் நிலைமையொன்று ஏற்பட்டது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *