மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொன்று மகன் தற்கொலை ! இறுதிக் கிரியைகளைசெய்ய பணமும் ஒதுக்கிவைப்பு!!

மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தியாகராய நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தியாகராய நகர் தாமஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் (65). தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். நடேசனின் மனைவி சுந்தரவல்லி (53). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

இவர்களது ஒரே மகன் விக்னேஷ் (22). சுந்தரவல்லிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் அவர் தானாக பேசிக்கொண்டு இருப்பார். இதனால் அருகில் உள்ளவர்கள் சுந்தரவல்லி குடும்பத்தினரிடமிருந்து சற்று விலகியே இருந்துள்ளனர்.

மகன் விக்னேஷ் தனது தாய் சுந்தரவல்லியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து பராமரித்து வந்துள்ளார்.

ஈக்காட்டு தாங்கலில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் உள்ள உணவு விடுதியில் விக்னேஷ் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும், மாலை நேரத்தில் தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் டெலிவரி பாயாகவும் வேலை பார்த்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு விக்னேஷ் பணிமுடிந்து வீட்டுக்கு வந்ததும் தூங்க முயன்றுள்ளார். அப்போது சுந்தரவல்லி, மகன் விக்னேஷை தூங்க விடாமல் எழுப்பியபடியே இருந்துள்ளார்.

இதனால், விரக்தியடைந்த விக்னேஷ் தனது தாயை தாக்கியுள்ளார். இதில், சுந்தரவல்லி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தாயை கொலை செய்த சோகத்தில் அவரது சேலையில் தூக்கிட்டு விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுபற்றிய தகவல் அறிந்தது தேனாம்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறப்பதற்கு முன்னதாக கடிதம் ஒன்றையும் விக்னேஷ் எழுதி வைத்துள்ளார். அதில், ”அனைவரும் மரம் வளர்க்க வேண்டும். இயற் கையை பாதுகாக்க வேண்டும். ஒற்று மையாக இருக்க வேண்டும். நான் சில நாட்களாக சந்தோஷமாக இல்லை. எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என எழுதி வைத்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இறப்பதற்கு முன்பு தனது நண்பர்களுக்கு “நாளை நல்ல செய்தி சொல்கிறேன்” என்று குறுந்தகவலையும் அவர் அனுப்பி உள்ளார். தாயை கொலை செய்து விட்டு மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தியாகராயநகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாயை கொலை செய்து விட்டு தற்கொலை செய்துகொண்ட விக்னேஷ், இறப்பதற்கு முன்னர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் தனது அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர் ஒருவரின் வங்கி கணக்குக்கு ரூ.6,500 அனுப்பி வைத்துள்ளார்.

துபற்றி நண்பர் கேட்டபோது, “நாளை எனது வீட்டில் ஒரு காரியம் உள்ளது. நீதான் அதை முன்னின்று நடத்த வேண்டும். அது என்ன என்பது நாளை தெரியும்” என தெரிவித்துள்ளார். தாய் மற்றும் தனது இறுதி சடங்கு செலவுக்காகவே இந்த பணத்தை அவர் முன்கூட்டி அனுப்பி வைத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *