மஹிந்தவின் அராஜகத்தை அடக்கியதால் புதிய அரசமைப்புப் பணிக்குப் புத்துயிர்! – சுதந்திர தினத்துக்கு முன்னர் வரைவு வெளியாகும் என்கிறார் சுமந்திரன்

“குறுக்கு வழியில் ஆட்சிப்பீடம் ஏறிய மஹிந்த ராஜபக்ஷ அரசின் அடக்குமுறையை – ஒடுக்குமுறையை – அராஜகத்தை நாம் அடக்கியதால் புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகள் புத்துயிர் பெற்றுள்ளன.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (29) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த நவம்பர் 7ஆம் திகதி வரவிருந்த அரசமைப்பு வரைபைத் தடுப்பதற்காகவே மஹிந்தவை பிரதமராக நியதித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் ஜனாதிபதி.

19ஆவது திருத்தத்தில் இருந்த தமது அதிகாரங்கள் பறிக்கப்பட்டதை அறியாதவர் போன்று இந்த நடவடிக்கைகளை செய்திருந்தார்.

19ஆவது திருத்தத்தில் அகற்றப்பட்ட நிறைவேற்று அதிகாரங்களை இன்னும் தன்னுடன் இருப்பது போன்று ஜனாதிபதி செயற்பட்டு இந்தத் தீர்மானங்களை எடுத்துள்ளார்.

இந்த செயற்பாட்டின்போது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்நின்று செயற்பட்டது. இந்த செயற்பாட்டில்தான் நாட்டில் பெரும் வரவேற்பு இருக்கின்றது. ஆனால், இதில் சில விமர்சனங்களும் இருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்க நீதிமன்றம் சென்றதாக ஒரு விமர்சனமும் உள்ளது.

நாட்டில் ஜனநாயகம் வீழ்ச்சி அடைகின்றதாக அல்லது சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைகின்றதாக இருந்தால், மிகவும் பாதிக்கப்படுவது தமிழ் மக்கள். ஆகையினால், சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைவதை ஏற்க முடியாது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழர்களாக சுயநலத்துடன் சிந்தித்திருந்தால் கூட நாங்கள் அதைச் செய்திருக்க வேண்டும். அரசமைப்பு மீறப்படுகின்ற போது, அதை மீறப்படாமல் தடுக்கின்ற உரிமை தமிழ் மக்களுக்குத் தன் உள்ளது.

ஏனெனில், ஒரு அரசியல் தீர்வை நாம் எதிர்நோக்குவது, அரசமைப்பின் மூலமான ஒரு தீர்வு. புதிய அரசமைப்பு மூலமாக அல்லது அரசமைப்பு மறுசீரமைப்பு மூலமாக எழுதப்படும் தீர்வையே நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.

அவ்வாறு எழுதப்பட்ட பின்னர் அரசமைப்பு மீறப்படுமாக இருந்தால், அந்த தீர்வில் ஒரு பிரியோசனமும் இல்லாமல் போய்விடும்.

தற்போதுள்ள சூழ்நிலையில், ஜனாதிபதி கலைக்க முடியாதென இருக்கின்றபோது, அவர் பாராளுமன்றத்தைக் கலைத்தார். பிரதமரை மாற்ற முடியாதென எழுதப்பட்டபோது, பிரதமரை மாற்றினார். அது நேரடியாகவே அரசமைப்பை பிரியோசனமற்றதாக ஆக்கும் செயற்பாடுகள்.

அரசமைப்பை பேணி அதன்படி, அனைவரும் ஒழுக வேண்டுமென்பதை இன்று தடுக்காவிடின், தீர்வு வந்தபின்னரும் அவர்கள் அதை மீறுவார்கள். அப்போது நாங்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

இந்தநிலையில் தான் அரசமைப்பை மீறிச் செய்யும் செயற்பாட்டை தட்டிக் கேட்டோம். அதில் வெற்றியும் கண்டோம். இதனால் ஏற்பட்ட விளைவுகள் மிக மிக முக்கியமானவை.

நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. மஹிந்த ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டில் அடக்குமுறை ஒடுக்குமுறைகள் காணப்பட்டன. தற்போது மக்கள் நிம்மதியாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

மூன்று வருடகாலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என சொல்லிக் கொண்டிருந்த பலருக்கு மஹிந்த பிரதமர் ஆசனத்திற்கு வந்தவுடனேயே தெளிவு வந்துவிட்டது.

இந்த தீங்கு மீண்டும் எம் மத்தியில் வராதாவாறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம் என தமிழ் மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கின்றது.

தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில், நாட்டில் ஜனநாயகத்தைப் பேணுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுள்ளதென்ற நல்ல எண்ணம் உதித்துள்ளது.

இது புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியில் மிகப்பெரிய பங்கை வகிக்கும். நாட்டைப் பிரிக்க முயலவில்லை. நாட்டுக்கு கேடு விளைவிக்க விரும்பவில்லை. அதை தடுத்து நிறுத்தியிருக்கின்றோம்.

சிறிய எண்ணிக்கையிலானவர்களாக நாங்கள் இருந்தாலும் கூட, நாட்டுக்காகப் பாரிய பங்களிப்பை தமிழ் மக்கள் செய்திருக்கின்றார்கள்.

புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளிலே சிங்கள மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் விலகுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

ஆகையினால், மிகத் துரிதமாக புதிய அரசமைப்பு உருவாக்கும் பணிகளில் நாங்கள் ஈடுபடுகின்றோம்.

எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பியும் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்த புதிய அரசமைப்புக்கான ஒரு வரைபை வெளியிடுவோம்.

புதிய அரசமைப்பு உருவாக்கும் முயற்சி மக்கள் மத்தியில் கொண்டு வரப்படும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை நிரூபிக்க முழு மூச்சுடன் செயற்பட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்புக்குப் போகும் போது, ஏற்கனவே, குறிப்பிட்ட நல்லெண்ணம், மிகப்பாரிய பங்கு வகிக்கும்.

எதிர்வரும் வருடத்தில் புதிய அரசமைப்பை உருவாக்கும் மிகப் பாரிய சந்தர்ப்பம் எழுந்துள்ளது. தற்போது எழுந்த குழப்பத்தில் அது புத்துயிர் பெற்றுள்ளது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *