வெள்ளம் ஏற்படுத்திய துன்பத்திலிருந்து வன்னி மக்களை விரைவாக மீட்போம்! – கிளிநொச்சியில் ரணில் உறுதிமொழி

வறுமையில் முன்னணியில் இருந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை வெள்ளம் மீண்டும் துன்பப்படுத்தியுள்ளது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்தத் துன்பத்திலிருந்து அவர்களை மீட்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசு விரைந்து எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

வடக்கு மாகாணத்தில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 10 ஆயிரம் ரூபா நிதி இழப்பீடாக உடனடியாக வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சொத்து இழப்பு மதிப்பீடு நிறைவடைந்ததும் 25 இலட்சம் ரூபா வரை காப்பீட்டுப் பணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள இடர் தொடர்பான பாதிப்புக்கள் மற்றும் மக்களுக்கான இழப்பீடுகள் – உதவிகள் தொடர்பில் ஆராய்வதற்காகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கிளிநொச்சிக்குச் சென்றார்.

இதன்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ள இடர் பாதித்த பகுதிகளை ஹெலியில் இருந்தவாறே பிரதமர் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளுடனான முக்கிய கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த வாரத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்ப்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக சுமார் 38 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயம் மற்றும் சிறு வர்த்தகங்கள் சுயதொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் பொருளாதார நிலையில் பின்னணியில் உள்ள இரண்டு மாவட்டங்களாகும். அதனால் இந்த வெள்ளப் பாதிப்பு என்பது அவர்களை மிகவும் பாதித்துள்ளது.

எனவே, இவர்களுக்கான உதவிகளை வழங்கி அபிவிருத்தியை மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம்.

வெள்ளம் தொடர்பான ஆபத்து இன்னும் குறையவில்லை. ஆகவே, நாம் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும்.

இரண்டு வாரங்களுக்குள் வெள்ளத்தால் வீடுகள் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்குமான பத்தாயிரம் ரூபா வழங்கப்படும்.

அதனைவிட தறப்பாள் மற்றும் கூரைத்தகடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கின்றோம். சுகாதாரம் தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றோம்.

கிணறுகளைச் சீரமைக்க கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

விசேடமாக நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்குகின்றோம். விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் இறந்துள்ளன. வியாபார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கட்டியெழுப்ப உதவவுள்ளோம்.

வீடு மற்றும் சொத்து இழப்புக்களுக்குக் காப்புறுதியூடாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கின்றோம்.

சில மாதங்களுக்கு நுண்கடன் சேகரிப்பவர்களைத் தடை செய்கின்றோம். அதேபோன்று வங்கிக் கொடுப்பனவுகள் தொடர்பிலும் ஆராய்கின்றோம்.

பிரதான பிரச்சினையாக வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு பிரதேச சபைகள் ஊடாக மதிப்பீடுகள் பெற்று அவற்றைப் புனரமைப்போம்.

இதனைவிட வீட்டு அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் உள்ளிட்டவர்கள் இங்கு வருகின்றனர். ஏனையவர்களும் வருவார்கள்.

விவசாய அமைச்சரையும் நான் சந்திப்பேன். அவரை இங்கு அனுப்புகிறேன்.

அதனைவிட எனது அமைச்சின் செயலாளரும் இடையிடையே இங்கு வருவார். கொழும்பிலும் இது தொடர்பில் அமைச்சர்களுடன் கலந்துரையாடுவோம்” – என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் பொது நிர்வாகம், இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே, இராஜாங்க அமைச்சர்களான விஜயகலா மகேஸ்வரன், ஹர்ஷ டி சில்வா, அலுவத்துகொட ஆகியோருடன் குழுக்களின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, எஸ்.சிவமோகன், த.சித்தார்த்தன், டக்ளஸ் தேவானந்தா மற்றும் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி, புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று போன்ற பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் போன்றோரும், துறைசார் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *