‘குடியைக் கெடுத்த குடி’ – கணவனின் வெறிச்செயலால் 3 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி!

கரூர் அருகே 3 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பட்டவர்த்தியை சேர்ந்தவர் வீர பாண்டி, தொழிலாளி. இவரது மனைவி கார்த்திகா (வயது 28).

இவர்களுக்கு தனிஷ்கா (8), தனுஷ்கா (6), துர்கா (3) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இன்று அதிகாலை கார்த்திகாவின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் கதவை தட்டி கார்த்திகாவை அழைத்துள்ளனர். ஆனால் உள்ளே இருந்து எந்தவிதமான சத்தமும் வரவில்லை.

இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது உள்ளே கார்த்திகா மற்றும் அவரது 3 மகள்கள் வாயில் நுரை தள்ளியபடி மயக்கமடைந்து கிடந்தனர்.அதிர்ச்சியடைந்த பொது மக்கள் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர்.

பின்னர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது கார்த்திகா 3 குழந்தைகளுக்கும் வி‌ஷம் கொடுத்து அவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. கார்த்திகாவின் கணவர் வீரபாண்டிக்கு மது பழக்கம் இருந்து வந்தது.

தினமும் குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் வீட்டு செலவுக்கும் பணம் கொடுக்கவில்லை.

இதனால் குடும்பத்தை நடத்துவதில் கார்த்திகா மிகவும் சிரமமடைந்தார். நேற்றிரவும் வீரபாண்டி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் சத்தம் போட்டதையடுத்து வீரபாண்டி அங்கிருந்து சென்று விட்டார்.

கணவன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதால் வாழ்க்கையில் விரக்தியடைந்த கார்த்திகா, தனது 3 மகள்களுக்கும் நேற்றிரவு சாப்பாட்டுடன் அரளி விதையை அரைத்து கலந்து கொடுத்து விட்டார்.

அதனை 3 மகள்களும் சாப்பிட்ட பின்னர் அவரும் வி‌ஷம் கலந்த உணவை சாப்பிட்டுள்ளார்.

வீரபாண்டி வெளியே சென்று விட்டதாலும், பொது மக்கள் யாருக்கும் தெரியாததாலும் கார்த்திகாவும், அவரது மகள்களும் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை உயிருக்கு போராடியுள்ளனர்.

இன்று காலை பொதுமக்கள் பார்க்கவே 4 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இல்லையென்றால் 4 பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *