கிளிநொச்சியில் நாளை ரணில்: உறுதிப்படுத்தினார் சுமந்திரன்!

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் குறித்துப் பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை வெள்ளிக்கிழமை வருகை தரவுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.

பிரதமரின் வருகையையடுத்து வெள்ள இடரால் ஏற்பட்ட சேத விவரங்கள் தற்போது தீவிர கதியில் திரட்டப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 21ஆம் திகதி முதல் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மக்கள் இடம்பெயர்ந்தனர்.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வீட்டிலிருந்த உடமைகளைக் கைவிட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடினார்கள்.

இந்த இடர் காரணமாக வீடுகள், வீட்டு உடமைகள், வயல்கள், வீதிகள், பாலங்கள் என்று பல்வேறு வகையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கால்நடைகள் உயிரிழந்தும் காணாமலும் போயுள்ளன.

இடர் ஏற்பட்டு 5 நாட்கள் ஆகின்ற நிலையில் சேதவிவரங்கள் திணைக்களங்களால் முழுமையாக இன்னமும் கணக்கெடுக்கப்படவில்லை. திணைக்களங்களிடமிருந்து உரிய விவரங்கள் தமது கைக்கு வந்து சேரவில்லை என்று தெரிவிக்கும் மாவட்ட செயலக வட்டாரத்தினர்,

நாளை வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சிக்கு வருகை தருவதற்கு முன்னதாக அந்த விவரங்கள் திரட்டப்படும் என்று தெரிவித்தனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பும் நாளை நடைபெறவுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *