நாடாளுமன்றச் செயற்பாட்டிலும் சர்வதேசம் தலையிடும் அபாயம்! – கூக்குரலிடுகின்றது மஹிந்த தரப்பு

இலங்கை நாடாளுமன்றச் செயற்பாடுகளிலும் சர்வதேசம் தலையிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என மஹிந்த அணியின் எம்.பி. லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டாம் என, சுமந்திரன் ஐரோப்பிய மற்றும், ஐ.நா சபையிடம் கோரியுள்ளதன் மூலம், அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“மஹிந்தவை, எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டாம் என, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், ஐ.நா. சபைக்கும் அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது இலங்கையின் உள்ளகப் பிரச்சினை.

எதிர்க்கட்சித் தலைவரை நாடாளுமன்றமே தெரிவு செய்யும். நாடாளுமன்றின் இறுதி அமர்வில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அரசுக்கு 102 உறுப்பினர்களின் ஆதரவே இருந்தது.

மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்டு செயற்பட நாடாளுமன்றின் பல கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ஆனாலும், சுமந்திரன் இவ்வாறு கடிதம் எழுதுவது அரசுக்கு ஒத்துப்போகும் எதிர்க்கட்சியை உருவாக்கவே.

அரசுக்குச் சார்பான எதிர்க்கட்சி அமைந்தால், அவர்கள் எதிர்ப்பார்க்கும் அரசமைப்பை அவர்களினால் கொண்டு வரமுடியும். இதுதான் அவர்களின் முதல் முயற்சி.

எங்கள் நாட்டின் நாடாளுமன்றப் பிரச்சினைக்கு, ஐரோப்பிய மற்றும், ஐ.நா. சபை எவ்வாறு தலையிடமுடியும் என்று எனக்கு தெரியவில்லை.

அரசியல்வாதியாக நாம் ஏனைய நாடுகளின் எதிர்கட்சித் தலைவர் குறித்து தனிப்பட்ட விதமாகத் தொடர்பு கொண்டாலும், நாடாளுமன்ற விடயங்களில் தலையிடுவதில்லை.

ஆனால், இங்கு நாடாளுமன்றத்துக்குள்ளும் ஐரோப்பிய மற்றும் ஐ.நா. சபை தலையிடவேண்டும் என்று கோரியுள்ளனர்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *