‘பெண்’ கிடைக்காத தேசமாகும் சீனா – மூன்று கோடி இளைஞர்கள் தவிப்பு !

சீனாவை இரும்புத் திரை தேசம் என்பார்கள். அந்த இரும்புத் திரைக்குள் நடக்கும் அடக்குமுறைகளும் சர்வாதிகார நடவடிக்கைகளும் ஏராளம்.

அதிபராக ஒருவர் இரு முறை மட்டுமே பதவி வகிக்கமுடியும் என்கிற விதிமுறையை ஓர் ஆண்டுக்கு முன்பு மாற்றி, கிட்டத்தட்ட நிரந்தர அதிபராகப் பதவியேற்ற ஷி ஜின்பிங்கின் நடவடிக்கையே இதற்கு சாட்சி.

இது மட்டுமல்ல… சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இவையெல்லாம் சேர்ந்து இன்று அங்கு பாலின விகிதாச்சாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

இதனால், இளம் பெண்கள் பற்றாக்குறையில் தத்தளிக்கிறது சீனா. ஆம், இன்று சீனாவில் திருமணம் செய்துகொள்ள பெண் கிடைக்காமல், சுமார் மூன்று கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் தவிக்கிறார்கள்!

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, ‘ஒரு குழந்தைக் கொள்கை’ முப்பது ஆண்டுகளுக்கு முன் சீனாவில் அமல்படுத்தப்பட்டது. இக்கொள்கையை மீறும் குடும்பங்களுக்கு அரசு உதவிகள் மறுக்கப்பட்டன.

பல ஆண்டுகளாகவே இதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்த சீனப் பெண்கள், மனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஆண் வாரிசு மீதான விருப்பத்தினால், பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிக்கத் தொடங்கினர். சீன அரசும் அதைக் கண்டுகொள்ளவில்லை.

பெண்குழந்தைக் கருக்கலைப்பு உச்சத்தைத் தொட்டது. விளைவாக, சீனாவில் ஒரு மிகப் பெரிய பாலின இடைவெளி உருவானது.

தற்போது சீனாவில் பெண்களைவிட, 3.3 கோடி இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். இந்த இடைவெளி, ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய மணப்பெண் தட்டுப்பாட்டை அந்த நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தைத் தள்ளிப்போட்டு, பணம் சம்பாதிப்பதிலும் தனியாக வாழ்க்கையை அனுபவிப்பதிலும் சீனப் பெண்கள் ஆர்வம் காட்டுவதால், இப்பிரச்னை மேலும் தீவிரமடைந்தது.

இதனால், நாற்பது வயதைத் தொட்டும் மணமாகாத ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. கிராமங்களில் இளம் பெண்களைக் காண்பதே அரிதானது.

ஏழை இளைஞர்கள், விவாகரத்து செய்தவர்கள், ஊனமுற்றோர் நிலைமை இன்னும் பரிதாபமாக ஆனது.

பெருகிவரும் மணப்பெண் பற்றாக் குறையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட கடத்தல் காரர்கள், அருகில் இருக்கும் வியட்நாம், கம்போடியா, மியான்மர், லாவோ ஆகிய நாடுகளிலிருந்து

ஆயிரக்கணக்கில் இளம் பெண்களையும் சிறுமி களையும் கடத்திவந்து தென் சீன எல்லையில், சீன இளைஞர்களுக்கு விற்கின்றனர்.

சீன அரசும் இதைக் கண்டுகொள்ளாததால், சட்டவிரோதமான மணப்பெண் வர்த்தகம் வியட்நாம் – சீன எல்லையில் கொடிகட்டிப் பறக்கிறது.

 

ஒவ்வொரு மணமகனும், மணப்பெண்ணுக்கு சீனப் பாரம்பர்யமான ‘மணமகள் வரதட்சணையை’ ரொக்கம் அல்லது பரிசாகக் கொடுக்க வேண்டும் என்பது சீனாவில் கடைபிடிக்கப்பட்டுவரும் பாரம்பர்ய நடைமுறை.

இதையொட்டித் தங்களின் வருங்கால மனைவிகளுக்காக, சீன இளைஞர்கள் 3,000 டாலர் முதல் 17,000 டாலர் வரை செலவு செய்யத் தயாராக இருப்பதால், இந்தச் சட்டவிரோத மணப்பெண் சந்தை, தடங்கலின்றி அமோகமாக நடக்கிறது.

இந்த நடவடிக்கைகளினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது வியட்நாம்தான்.

சீன எல்லையில் கூப்பிடு தொலைவில் இருக்கும் வியட்னாமின் மியோ வாக் கிராமம்தான், பெண் கடத்தலுக்கான முக்கியப் பாதை.

இக்கிராமத்தில் உள்ள ஹுமாங் இனப் பெண்களும், அதன் அண்டைக் கிராமங்களில் வறுமையின் பிடியில் இருக்கும் பெண்களும்தான் அதிக அளவில் கடத்தப்படுகின்றனர்.

சிலசமயம், சிறப்பான எதிர்காலம் கிடைக்கும் என்ற ஆசையில் சட்டவிரோதமாக எல்லை தாண்டும் பெண்களும் கடத்தல் கும்பல்களிடம் சிக்கிச் சீரழிகின்றனர்.

கடத்தப்பட்டு விற்கப்படும் சிறுமிகள்கூடக் கட்டாயக் குழந்தைத் திருமணத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

மணப்பெண் தேவை சீனாவில்  இருப்பதாலும், தென் சீன எல்லைகள் முறையான கண்காணிப்பின்மையாலும், பெண் கடத்தல்கள் அமோகமாக நடக்கின்றன. கடத்தல்காரர் களிடமிருந்து பெண்கள் தப்புவது மிகவும் கடினம்.

சீன மொழி தெரியாததால், பரிச்சயம் இல்லாத ஊர்களில் விற்கப்படும் வியட்நாமிய பெண்களால் தங்களின் இருப்பிடத் தகவல்களை மீட்பவர்களுக்கு உடனடியாகத் தர இயலாது.

காவல் துறையின் உதவியை நாடினால், சீன குடியேற்றச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படுவர்.

ஆரோக்கியமான மனித வளம் தேவை என்ற பேராசையால், மனநலம் குன்றியவர்களும் மாற்றுத்திறனாளிகளும் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று சட்டம் இயற்றிய நாடு சீனா.

சொந்த மக்களின் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் சீனாவிடம், அண்டை நாட்டு ஏழைப்பெண்கள் உரிமை, பாதுகாப்பை எப்படி எதிர்பார்க்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். சீன மக்களிடம் மனமாற்றம் ஏற்படும் வரை, அப்பாவி பெண்களின் துயரம் தீராது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *