மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதேன்? – கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் நஸீர் கேள்வி

“ஐனநாயகத்தைக் காப்பாற்றி விட்டோம் எனக் குரல் எழுப்புவோர் மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதேன்?”

– இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்.

“ஜனநாயகத்தைக் காப்பாற்றிவிட்டோம் – நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது எனக் கொக்கரிப்பவர்கள் மக்களின் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடச் செய்யும் திரைமறைவு முயற்சிகளை மேற்கொள்ள முனைகின்றனர்.

இதனொரு அம்சமே சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என்ற அரசின் அறிவிப்பாகும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“மாகாண சபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்த அரசு தீர்மானித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் நல்லாட்சி அரசு என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஆட்சியில் எப்படி தேர்தல்கள் தள்ளிப் போடப்பட்டு வந்தனவே. அதே பாணியில் புதிய அரசும் செயற்பட முன் வந்துள்ளதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆறு மாகாண சபைகள் கலைக்கப்பட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் வகையில் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

மேலும், மூன்று மாகாண சபைகளில் ஆட்சிக்காலம் அடுத்து ஆண்டு நடுப்பகுதி வரை உள்ளது. எனவே, உடனடியாக அந்த மூன்று சபைகளின் ஆட்சி யையும் கலைக்க முடியாது. அப்படி செய்வது ஜனநாயக விரோதம் என்றே பொருள் கொள்ளப்படும்.

இந்நிலையில், எல்லா சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது நிச்சயமாக காலதாமதம் செய்வதற்கான ஒரு வழிமுறையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், ஜனநாயகம் பற்றி பெரும் குரல் எழுப்பும் அரசின் தார்மீகம் என்னவென்பது புரியாது உள்ளது.

எனவே, காலதாமதமின்றி கலைக்கப்பட்டுள்ள ஆறு மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தவறும் பட்சத்தில் மக்கள் தமது ஜனநாயக உரிமைக்களை வெற்றெடுப்ப தற்கான போராட்டத்தில் குதிக்கத் தயங்கமாட்டார்கள்.

இதற்கான சகல வழிகளையும் நாடவும் அவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இவ்வேளையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

மேலும், எல்லை நிர்ணயம், பெண்களுக்களுக்கான பிரதிநிதித்துவம் போன்ற விடயங்களையும் கையிலெடுத்துக்கொண்டு பொய்யான காரணிகளை முன்வைத்து தேர்தலைத் தள்ளிப்போட முயற்சிக்கக்கூடாது” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *