சர்வாதிகாரத்தைத் தடுத்து நிறுத்திய பெருமை சம்பந்தனையே சேரும்! – சுமந்திரன் தெரிவிப்பு

“இந்த நாட்டில் சர்வாதிகாரத்திற்கு வித்திடுகின்ற – சர்வாதிகாரத்திற்கு நாட்டைக் கொண்டு செல்கின்ற முயற்சியைத் தடுத்து நிறுத்திய பெருமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் ஐயாவையே சாரும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த நாட்டில் ஜனநாயகம் வீழ்ச்சியடையும்போது முதலாவது பாதிக்கப்படுவது தமிழ் மக்களாகவே இருப்பார்கள் எனவும் அவர் சுட் டிக்காட்டினார்.

“நாங்கள் பல தடவைகளில் ‘பிச்சை வேண்டாம்; நாயைப்பிடி’ என்ற நிலையில் செயற்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். கடி நாயைக்கட்டி வைக்க வேண்டிய தேவையிருக்கின்றது. அதனையே நாங்கள் செய்துள்ளோம். நாங்கள் பேரம் பேசிக் கொண்டிருக்கின்றபோது பேரம் பேசியவர்களைத் துரத்திவிட்டு கடிநாயை ஏவிவிட்டபோது அந்தக் கடிநாயைக் கட்டிப்போட வேண்டிய தேவை எங்களுக்கு இருந்தது. அதனையே நாங்கள் செய்தோம்” எனவும் சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

“தென்னிலங்கையில் உள்ள மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான மதிப்பு இன்று வானுயர வளர்ந்திருக்கின்றது. இது புதிய அரசமைப்புத் தொடர்பில் அவர்களுடன் உரையாடும்போது, அவர்களிடம் அதனைக் கொண்டு செல்கின்றபோது எங்கள் மீதுள்ள அந்த மதிப்பு புதிய அரசப்பை அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்யும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13ஆவது நினைவுதினம் நேற்றுப் பிற்பகல் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் பிரதம பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *